×

பருவநிலை மாற்றங்களை ஆய்வு செய்ய சென்னை கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த சிறு செயற்கைக்கோள்: ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது

திருவண்ணாமலை: சென்னை குன்றத்தூரில் உள்ள சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் பொறியியல் மாணவ-மாணவிகள் 42 பேர் கொண்ட குழுவினர், வடிவமைத்த சிறிய ரக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. எளிதில் காற்றில் மேல் நோக்கி பறக்கும் ஹீலியம் பலூன் உதவியுடன், 500 கிராம் எடையுள்ள செயற்கைக்கோள் இணைக்கப்பட்டு நேற்று காலை 7.30 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. அதிநவீன கேமரா, பருவநிலை மற்றும் வானிலையை பதிவு செய்யும் நவீன கருவிகள் இணைக்கப்பட்டு, ஒலிஅலை மூலம் செயற்கை கோளை கட்டுப்படுத்தும் கருவிகளையும் வடிவமைத்திருந்தனர்.

ஹீலியம் பலூனில் சிறிய பாராசூட் கருவியுடன் இணைத்து பறக்கவிடப்பட்ட செயற்கை கோள், விண்ணில் 27 கிலோ மீட்டர் பறந்து சென்றது. பின்னர் ஹீலியம் பலூன் வெடித்ததால் செயற்கை கோள் பாராசூட் உதவியுடன் தஞ்சாவூரில் தரையிறங்கியதை, மாணவர்கள் சேட்லைட் உதவியுடன் உறுதி செய்தனர். இதுகுறித்து, மாணவர் குழுவினர் கூறுகையில், 500 கிராம் எடையில், ₹25ஆயிரம் செலவில் இதனை வடிவமைத்து யுஎல்ஒஜி-3 என பெயரிட்டோம். வானில் காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் அழுத்தம் ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் கண்டறியும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள், மூன்றரை மணி நேரம் வானில் பறந்து, தகவல்களையும், சில படங்களையும் பதிவு செய்திருக்கிறது. செயற்கை கோளை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்றனர்.

The post பருவநிலை மாற்றங்களை ஆய்வு செய்ய சென்னை கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த சிறு செயற்கைக்கோள்: ஹீலியம் பலூன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Chennai College ,Thiruvannamalai ,Chennai Institute of Technology College ,Kunradthur ,Tiruvannamalai District Sports Hall ,
× RELATED ஆர்டிஓ, தாலுகா அலுவலகங்களுக்கு...