ஜாமீனில் எடுப்பதற்காக கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டு வக்கீலுக்கு கொலை மிரட்டல்: 6 பேர் கைது

பெரம்பூர்: ஜாமீனில் எடுப்பதற்காக கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பிக் கேட்டு வக்கீலுக்கு கொலைமிரட்டல் விடுத்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி தேபர் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்ற அப்பு (35). இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் மயிலாப்பூர் நொச்சி நகரைச் சேர்ந்த உலகநாதன் (33), சரவணன் என்ற லொட்டை சரவணன் (32), கார்த்திக் என்ற வெட்டு கார்த்திக் (27), வினோத் (28), விக்ரம் (30), விக்னேஸ்வரன் (27) ஆகிய 6 பேர் மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒன்றரை கோடி ரூபாய் ஹவாலா பணம் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றனர். இதில் தங்களை ஜாமீனில் எடுப்பதற்காக வழக்கறிஞர் கண்ணனிடம் ரூ.5 லட்சம் கொடுத்து வைத்திருந்தனர். பின்னர் அந்தப் பணம் வழக்கு சம்பந்தப்பட்ட பணம் எனக்கூறி போலீசார், பணத்தை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் ஜாமீனில் வந்த மேற்கண்ட நபர்கள் அடிக்கடி வழக்கறிஞர் கண்ணனுக்கு போன் செய்து நாங்கள் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பித் தாருங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு வழக்கறிஞர் கண்ணன் காவல்துறையினரால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது எனச் சொல்லியும் தொடர்ந்து அவருக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வழக்கறிஞர் வீட்டிற்கு கத்தியுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். மேலும் அப்போது வழக்கறிஞர் கண்ணன் இல்லாததால் செல்லும் வழியில் எம்ஜிஆர் நகர் முதல் தெருவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த 17 வுயது சிறுவனை கத்தியால் வெட்டிவிட்டுச் சென்றுள்ளனர். சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஜாமீனில் எடுப்பதற்காக கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டு வக்கீலுக்கு கொலை மிரட்டல்: 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: