தலித் சமூகத்தை சேர்ந்தவருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி: எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் சங்கம் வரவேற்பு

சென்னை: தலித் சமூகத்தை சேர்ந்தவருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்சி, எஸ்டி பணியாளர் நலச் சங்க பொதுச் செயலாளர் டி.மகிமைதாஸ், தலைவர் மணிமொழி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக நியமிக்கப்பட்டதை வாழ்த்தி வரவேற்கிறோம். துணை முதல்வர் என்பது பதவி அல்ல. பொறுப்பு. தன்மீதான விமர்சனங்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பதாக கூறும் அவரின் முதிர்ச்சியை இச்சங்கம் பாராட்டுவதுடன், அவரின் பணி சிறக்க வாழ்த்துகள். மேலும் தமிழ்நாடு அமைச்சரவை வரலாற்றில் 50 ஆண்டுகளில் இல்லாத புது வரலாறாக தலித் சமுதாயத்தை சேர்ந்த, எளிமையான குடும்பத்தில் பிறந்து, படிப்படியாக உயர்ந்த கோவி.செழியன் உயர் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியனின் பணி சிறக்கவும் சங்கம் சார்பில் நெஞ்சார வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தலித் சமூகத்தை சேர்ந்தவருக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி: எஸ்சி, எஸ்டி பணியாளர்கள் சங்கம் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: