×

பேட்டை மரக்கடையில் விடிய விடிய பற்றி எரிந்த ‘தீ’ பல கோடி ரூபாய் பொருட்கள் கருகி நாசம்

*10 மணி நேரம் போராடி அணைத்தனர்

பேட்டை : பேட்டை மரக்கடையில் விடிய விடிய எரிந்த தீயை 10 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரச்சாமான்கள் மற்றும் தளவாட பொருட்கள் கருகி சாம்பலானது. நெல்லை டவுனை அடுத்த பேட்டை, சேரன்மகாதேவி மெயின் ரோட்டில் மரக்கடை உள்ளது.

இங்கு வீட்டிற்கு தேவையான ஜன்னல், நிலை, கதவு மற்றும் சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் கடையில் திடீரென தீப்பிடித்தது. காற்று பலமாக வீசவே சுமார் 100 மீட்டர் பரப்பளவு கொண்ட கடையில் உள்ள தடிகள், மரச்சாமான்கள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கின. அடுத்தடுத்து வைக்கப்பட்டிருந்த கட்டைகளுக்கும், மரப் பொருட்களுக்கும் பரவிய தீ கடையின் மேற்கூரையை தொடும் அளவுக்கு உயர்ந்தது.

இதுகுறித்து பேட்டை, கங்கைகொண்டான், சேரன்மகாதேவி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் கார்த்திகேயன், வெட்டும்பெருமாள், கங்கைகொண்டான் மற்றும் பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கதுரை, சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் ஆகியோர் அடங்கிய 60 தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

4 வாகனங்களில் நிரப்பப்பட்ட தண்ணீர் முழுவதும் காலியானதால் மரக்கடையை ஒட்டியுள்ள காம்பவுண்ட் சுவரை உடைத்து அங்குள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விடிய, விடிய கடைக்குள் பரவிய தீ நேற்று காலை 8.30 மணிக்கு தான் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இருப்பினும் மாலை 3 மணிக்கு பின்னர் தீ முழுவதும் அணைக்கப்பட்டது.

தீயில் ராட்சத மரத்தடிகள் அனைத்தும் பஸ்பமானது. தீயில் கருகிய மர தளவாட பொருட்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. மாநகர போலீஸ் இணை கமிஷனர் கீதா, நெல்லை மாவட்ட தடயவியல் உதவி இயக்குநர் கலாலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மின் அரவை இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு தான் தீ விபத்துக்கு காரணம் என்று பேட்டை போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

சத்யா நகரில் மின்சப்ளை கட்

மரக்கடையில் பற்றிய தீ மின் வயர்களிலும் பிடித்ததால் பேட்டை பகுதியில் மின் சப்ளை நிறுத்தப்பட்டு மாற்று வழியில் வழங்கப்பட்டது. சத்யா நகரில் சுமார் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் மின்வயர்கள் தீயில் முற்றிலும் சேதம் அடைந்ததால், முழுவதுமாக மின் வயர்கள் அனைத்தையும் மாற்ற வேண்டியுள்ளது. இதனால் அங்கு முற்றிலும் புதிய மின்வயர்கள் பொருத்தப்பட்ட பிறகே மின்சப்ளை செய்யப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பேட்டை மரக்கடையில் விடிய விடிய பற்றி எரிந்த ‘தீ’ பல கோடி ரூபாய் பொருட்கள் கருகி நாசம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக...