மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 5 லட்சத்து 98 ஆயிரம் பேர் பயன்

ஈரோடு : தமிழக முதல்வரின் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 5 லட்சத்து 98 ஆயிரத்து 189 பேர் பயனடைந்து வருகின்றனர்.தமிழ்நாடு முதல்வரால் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டம் துவக்கி வைக்கப்பட்டு, தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் மூலம் உரிய பரிசோதனை செய்யப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்குவதே ஆகும்.

மேலும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு வீடு தேடி சென்று மருந்து, மாத்திரைகள் மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. 2 மாதத்துக்கு ஒரு முறை இந்நோயாளிகள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி நோய் தாக்கம் குறித்து நிலையறிந்து, தொடர் சிகிச்சை பெறவும், நோயின் தாக்கத்தால் நோயாளிகளுக்கு இதயம், சிறுநீரகம், கண்கள் மற்றும் பாதம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிப்புகளை தவிர்த்து நோயினை கட்டுக்குள் வைத்து கொள்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

தமிழகத்தில் மருத்துவ கணக்கெடுப்பின்படி, உயர் ரத்த அழுத்த நோய் பரவல் சராசரி 24.43 சதவீதமும், நீரிழிவு நோய் பரவல் சராசரி 7.28 சதவீதமும், இந்த இரண்டு நோய்களுக்குமான பரவல் சராசரி 10.12 சதவீதமுமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் உயர் ரத்த அழுத்தம் பாதிப்புடையவர்களாக 3 லட்சத்து 20 ஆயிரத்து 222 (17.57 சதவீதம்), நீரிழிவு நோய் பாதிப்புடையவர்களாக கண்டறியப்பட்டவர்கள் 1 லட்சத்து 44 ஆயிரத்து 173 (7.91 சதவீதம்), இந்த இரண்டு நோய்களும் பாதிப்புடையவர்களாக 1 லட்சத்து 33 ஆயிரத்து 794 பேர் (7.34 சதவீதம்) உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 5 லட்சத்து 98 ஆயிர்துது 189 பேரும் தமிழக முதல்வரின் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

மாநில தரவுகளின் படி உயர் ரத்த அழுத்தம், நீரழிவு நோய் ஆகியவற்றின் சராசரி பரவல் குறியீட்டினை அடைய வேண்டுமெனில் பொதுமக்கள் போதுமான விழிப்புணர்வுடன் 100 சதவீதம் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என தொடர்ந்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்காக ஈரோடு மாவட்டத்தில் 375 மகளிர் தன்னார்வலர்கள், 375 துணை சுகாதார நிலைய பகுதிகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை மேற்கொண்டு நோய் அறிகுறி உடையவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி மருத்துவரது ஆலோசனை பெற வலியுறுத்துவதுடன், மருத்துவரால் உறுதிசெய்யப்பட்ட உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டு, தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு சென்று அங்கு பணிபுரிவோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டு நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் இயன் முறை சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், வலி நிவாரண சிகிச்சையில் 9 ஆயிரத்து 336 பேரும், இயன் முறை சிகிச்சையில் 27 ஆயிரத்து 582 பேரும் இதுவரை பயனடைந்துள்ளனர்.

வீடு தேடி பரிசோதனை

இத்திட்டத்தின் பயனாளியான பவானி ஜம்பை பகுதியை சேர்ந்த குருவாள் (66) என்ற மூதாட்டி கூறியதாவது: நான் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, ஒருவரது துணையோடு தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால், தற்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் எனது வீடு தேடி வந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு இலவசமாக மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்குகிறார்கள். இதனால், எனக்கு நேரமும், செலவும் மீதமாகிறது. சிறப்பான திட்டத்தினை வழங்கிய தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மருந்து வழங்கல்

திங்களூர் பணிக்கம்பாளையத்தை சேர்ந்த மூதாட்டி மாராள் (64), கம்புளியாம்பட்டியை சேர்ந்த முதியவர் ராமதாஸ் (64) ஆகியோர் கூறுகையில்,“எங்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான பரிசோதனை செய்து, அதற்கான மருந்து மாத்திரைகளை இலவசமாக அரசால் வழங்கப்படுகிறது. மேலும், எங்களுக்கு தொடர் சிகிச்சை செய்து, எங்களது உடல் நலனில் மருத்துவ பணியாளர்கள் அக்கரை கொண்டு போதிய அறிவுரைகளை வழங்கி, எங்களின் உடலை கண்காணித்து அதற்கெற்ப மருந்து, மாத்திரைகளை வழங்குகின்றனர். இத்திட்டத்தை அளித்த தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.

The post மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 5 லட்சத்து 98 ஆயிரம் பேர் பயன் appeared first on Dinakaran.

Related Stories: