×

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி

வேலூர்: பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் டாக்டர் ஒருவர் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

எனது சொந்த ஊர் சேலம் அருகே உள்ள ஓமலூர். நான் இந்த பகுதியில் தங்கி டாக்டராக வேலை செய்து வருகிறேன். எனது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், என்னுடைய பெயரில் மும்பையில் இருந்து துபாய்க்கு கூரியர் சர்வீஸ் மூலம் ஒரு பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருந்ததால், மும்பை போலீசிடம் ஒப்படைத்ததுள்ளோம். போலீசார் உங்களை அனுகுவார்கள் என்று கூறினர். மேலும் எனது அழைப்பை, போலீசாரின் எண்ணுடன் இணைத்தனர்.

அதில் மும்பையில் இருந்து உதவி காவல் ஆணையர் பேசுவதாக கூறியவர், எங்கள் உயர் அதிகாரியான டிஜிபியிடம் பேசுமாறு என்னுடைய அழைப்பை வேறொரு எண்ணுடன் இணைத்தார். அதில் பேசியவர், தங்கள் மீதான குற்றத்துக்கு தக்க ஆதாரங்கள் உள்ளன. உங்களை உடனடியாக கைது செய்ய உள்ளோம் என்றார். எனது குடும்ப முகவரி மற்றும் இருப்பிடத்தை சரியாக கூறினார். எனவே இந்த விஷயத்தை சரி செய்ய நாங்கள் கூறும் எண்ணிற்கு பணத்தை அனுப்ப வேண்டும் என கூறினர்.

இவர்களால் எனது குடும்பத்தினருக்கு தொல்லை நேரிடும் என எண்ணி நான் அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு ₹1 லட்சத்தை அனுப்பினேன். அவர்கள் பணம் செலுத்திய பிறகும் சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு 5 நிமிடத்திற்கு ஒருமுறை செல்போன் எண்ணிற்கு தொடர்ந்து அழைப்புகள் வரும். அதற்கு கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

ஆனால் எனக்கு திடீரென அழைப்பு வரவில்லை. நான் அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது, அது செயலில் இல்லை. அப்போது தான் அவர்கள் என்னிடத்தில் பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது. பறிபோன எனது பணத்தை மீட்டு தருவதோடு, பணத்தை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி appeared first on Dinakaran.

Tags : Bernampatu ,Police Station ,Vellore ,Peranampatu police station ,Omalur ,Salem ,Bernampatu Police Station ,Dinakaran ,
× RELATED மாம்பலம் காவல் நிலையத்திற்குள்...