- பட்டுக்கோட்டை வியாபாரிகள் சங்கம்
- அவடி காரைகுடி
- மயிலாடுதுறை
- பட்டுக்கோட்டை
- காரைக்குடி
- திருவாரூர்
- ஆவடி
பட்டுக்கோட்டை, செப். 30: ரயில் இல்லாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். காரைக்குடி, மயிலாடுதுறை ரயிலை இயக்க வேண்டும் என்று பட்டுக்கோட்டை வர்த்தகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர். மயிலாடுதுறையிலிருந்து வரும் பயணிகள் திருவாரூரில் சிறிது நேரம் காத்திருந்து திருவாரூர் – காரைக்குடி ரயில் மூலமாக காரைக்குடிக்கும், காரைக்குடியிலிருந்து மயிலாடுதுறை பகுதிகளுக்கும் பயணம் செய்து வந்தனர். இந்த ரயில்களை ஒரே ரயிலாக இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மயிலாடுதுறை – திருவாரூர் – காரைக்குடி ரயில் அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல் ரயில் பயணிகள், வர்த்தகர்கள், நோயாளிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மயிலாடுதுறை பகுதிகளுக்கு எளிதில் சென்று வர மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மயிலாடுதுறை சந்திப்பு சென்னை – விழுப்புரம் – மயிலாடுதுறை திருச்சி மெயின் லைனில் உள்ள முக்கியமான ஊராகும். ஆன்மீக தலங்கள் கல்வி நிறுவனங்கள் நிறைந்த ஊராகும். மயிலாடுதுறை பகுதியிலிருந்து காரைக்குடிக்கும் இது போல் பயணம் செய்து வந்தனர். 03.05.2024 முதல் நேரமாற்றத்துடன் திருவாரூர் – காரைக்குடி சிறப்பு பயணிகள் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் மயிலாடுதுறையிலிருந்து இயங்காமல் திருவாரூரிலிருந்து இயங்குவதால் காரைக்குடி மார்க்கத்தில் உள்ள பயணிகள் பேரளம், மயிலாடுதுறை பகுதிகளுக்கு செல்ல இயலவில்லை.
மயிலாடுதுறை பகுதியிலிருந்தும் காரைக்குடி மார்க்கத்தில் உள்ள ஊர்களுக்கு நேரடியாக ரயிலில் பயணம் செய்ய இயலவில்லை. இதனால் பெரும்பாலான பயணிகள் பேருந்துகள் மூலம் பயணம் செய்கின்றனர். இதனால் ரயில்வே துறைக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. பயணிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ரயில் பாதை அமைக்கப்பட்டும் பயணிகளுக்கு பயனில்லாமல் இதுபோன்ற ரயில்கள் இயங்குகின்றன என ரயில் பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே வண்டி எண் 06197 /06198 திருவாரூர் – காரைக்குடி பயணிகள் ரயில்களை மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வழியாக காரைக்குடிக்கு இயக்க வேண்டும்.
மேலும் இந்த ரயிலை காரைக்குடியிலிருந்து மதுரை வரை நீட்டித்து மயிலாடுதுறை மதுரை ரயிலாக இயக்க வேண்டும். தற்போது இயக்கப்படும் மயிலாடுதுறை – திருவாரூர் 06541 மற்றும் திருவாரூர் – பட்டுக்கோட்டை 06851 ரயிலை ஒருங்கிணைத்து ஒரே ரயிலாக மயிலாடுதுறை – பட்டுக்கோட்டை ரயிலாக தினசரி இயக்கப்பட வேண்டும். இந்த ரயிலை திருச்சிராப்பள்ளி வரை நீட்டித்து இயக்க வேண்டும். திருச்சி ரயில்வே கோட்டம் முன்மொழிவு செய்து அனுப்பிய காரைக்குடி – மயிலாடுதுறை பயணிகள் ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் காரைக்குடி பகுதியிலிருந்து மயிலாடுதுறைக்கு எதிர்திசையில் பயணம் செய்ய பயணிகள் ரயில் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே இந்த காரைக்குடி – மயிலாடுதுறை ரயிலையும் உடனடியாக இயக்க வேண்டும் என பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதி ரயில் பயணிகள், வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ரயில் இல்லாமல் பயணிகள் அவதி காரைக்குடி, மயிலாடுதுறை ரயிலை இயக்க வேண்டும் பட்டுக்கோட்டை வர்த்தகர்கள் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.