×

திருமழபாடி ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணி

அரியலூர், செப். 30: அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், திருமழபாடி ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை 2024 தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் முதல்நிலை மீட்பாளர்களுக்கான பயிற்சியினை மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், திருமழபாடி ஊராட்சியில், வடகிழக்கு பருவமழை காரணமாக வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டால், தற்காத்துகொள்வது குறித்து முதல் நிலை மீட்பாளர்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மூலம் முதல் நிலை மீட்பாளருக்கான பயிற்சிகள் நடைபெற்றது.

தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு குச்சிகளின் இருப்பு விவரங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டால் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ளவும், மேலும், மழைநீர் தேங்கும் பட்சத்தில் உடனுக்குடன் பாதுகாப்பாக மழை நீரை வெளியேற்றும் வகையிலும், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், முதல்நிலை மீட்பாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

மேலும், வடகிழக்கு பருவமழை காலங்களில் துறை வாரியாக வழங்கப்பட்ட பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் பல்வேறு துறைகள், தீயணைப்பு துறையினருடன் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன், இப்பயிற்சி முதல்நிலை மீட்பாளர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்தார்.

தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன்பாக வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான மாதிரி ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது.

இதில் , தீயணைப்புத் துறை உதவி மாவட்ட அலுவலர் வீரபாகு, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷண்ன், செந்துறை நிலைய அலுவலர் பூபதி, அரியலூர் நிலைய அலுவலர் (பொ) முருகன், வட்டாட்சியர் முத்துலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

The post திருமழபாடி ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணி appeared first on Dinakaran.

Tags : Thirumalabadi panchayat ,Ariyalur ,District Collector ,Rathnaswamy ,North East Monsoon ,Tirumalapadi Panchayat ,Ariyalur District ,Thirumanoor Panchayat Union ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED வரும் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்