×

எலிவால் அருவியில் கொட்டுது தண்ணீர்

 

பெரியகுளம், செப். 30: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு மேல் மேற்குத் தொடர்ச்சி மலையில் எலிவால் அருவி அமைந்துள்ளது. இந்த அருவி கொடைக்கானல் மலைப்பாதையில் உள்ள டம் டம் பாறையின் எதிரே அமைந்துள்ளது. அதனால் அங்குள்ள வியூ பாய்ண்ட்டில் இருந்து எலிவால் அருவியை பார்த்து ரசிக்கலாம்.

கடந்த ஒரு மாத காலமாக போதிய மழை இல்லாததால், நீர்வரத்து குறைந்து எலிவால் அருவியில் தண்ணீர் விழுவது தெரியாத அளவில் இருந்தது. இதனால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் டம்டம் பாறை பகுதியில் நின்று அருவியைப் பார்த்து ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் எலிவால் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பெருமாள்மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அருவிக்கு நீர்வரத்து துவங்கி தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் தற்போது கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் எலிவால் அருவியில் தண்ணீர் விழுவதைப் பார்த்து மகிழ்ச்சியுடன் புகைப்படம், செல்பி எடுத்துச் செல்கின்றனர்.

The post எலிவால் அருவியில் கொட்டுது தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Elival ,Periyakulam ,Eliwal ,Western Ghats ,Manchalaru dam ,Periyakulam, Theni district ,Dum Dum Rock ,Kodaikanal Pass ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் கண்மாய் கரையை மணல் மூடை அடுக்கி பலப்படுத்தும் பணி