அடுத்த தலைவராக அறிவிக்கப்பட இருந்த ஹிஸ்புல்லா துணை தளபதியும் இஸ்ரேல் தாக்குதலில் பலி: லெபனான் மீது குண்டு மழை பொழிவதால் பதற்றம் நீடிப்பு

பெய்ரூட்: லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்ட நிலையில் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட இருந்த ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தளபதி நபில் கவுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் நேற்று தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் பெரும்பாலான நகரங்கள் இஸ்ரேல் குண்டுவீச்சில் அழிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் காசா நகரை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லெபனானில் இருந்து செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவியது. இதையடுத்து லெபனானுக்கு எதிரான தாக்குதல்களை இஸ்‌ரேல் தீவிரப்படுத்தியது. வாக்கி டாக்கிகள், பேஜர்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை வெடிக்க செய்து தாக்குதல்கள் நடந்தன.இந்த தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 1030 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஹிஸ்புல்லா அமைப்பின் முகாம்கள், ஆயுத கிடங்குகளின் மீது இஸ்‌ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தஹியே என்ற இடத்தில் ஹிஸ்புல்லாவின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடத்தின் மீது கடந்த 27ம் தேதி இஸ்‌ரேல் குண்டு மழை பொழிந்தது. இந்த தாக்குதலில் கட்டிடத்தின் ரகசிய அறையில் இருந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. இதை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் தென் பகுதி தளபதி அலி கார்க்கி உள்ளிட்ட முக்கிய தளபதிகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது. மூத்த தளபதியான அலி கார்க்கியும் கொல்லப்பட்டார் என்று ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் துணை தளபதி நபில் கவுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்தது. நபில் கவுக் கொல்லப்பட்டது பற்றி ஹிஸ்புல்லா அமைப்பு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நபில் கவுக் கொல்லப்பட்ட இடம் பற்றிய தகவலும் தெரியவில்லை. ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதில் நபில் கவுக்கின் பெயரும் அடிப்பட்டது. இவர், ஹிஸ்புல்லா அமைப்பின் மத்திய கவுன்சிலின் துணை தலைவராக பதவி வகித்து வந்தார். தலைவராக அவரது பெயர் அறிவிக்கப்படும் முன்பே நபில் கவுக் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, லெபனான் மீது இஸ்ரேல் நேற்று தொடர்ந்து போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தாக்குதலால் 2லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு முகாம்களில் தங்கி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

நஸ்ரல்லா உடலில் காயங்கள் இல்லை: பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் குண்டுவீசிய போது கட்டிடத்தின் சுரங்க அறையில் ஹசன் நஸ்ரல்லா இருந்துள்ளார். இதில் நஸ்ரல்லா உட்பட 20 பேர் பலியானார்கள். இவர்களில் பலர் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் என்று கூறப்படுகிறது. இதை அந்த அமைப்பு இன்னமும் உறுதிபடுத்தவில்லை. கொல்லப்பட்ட நஸ்ரல்லாவின் உடல் கண்டெடுக்கப்பட்ட போது அ வரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இந்த தாக்குதலின் போது அதிர்ச்சியில் அவர் உயிர் இழந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த நபில் கவுக்
ஹிஸ்புல்லாவின் மத்திய கவுன்சிலில் துணை தளபதியாக இருந்தவர் நபில் கவுக். கடந்த 1980 முதல் அந்த அமைப்பில் இருந்து வந்தார். 2006 முதல் தெற்கு லெபனானின் தளபதியாக இருந்த நபில் கவுக் அவ்வப்போது அரசியல் மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து உள்ளூர் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார். 2020ம் ஆண்டு நபில் கவுக் மீது அமெரிக்கா தடை விதித்தது.

புதிய தலைவர் ஹசேம் சபேதீன்
கடந்த சில வாரங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான நஸ்ரல்லா உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து பலியாகியுள்ளனர். இதனால் ஹிஸ்புல்லா அமைப்புக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக ஹசேம் சபேதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நஸ்ரல்லாவின் அரசியல் வாரிசு மற்றும் நெருங்கிய உறவினர் ஆவார். தற்போது நிர்வாக கவுன்சிலின் தலைவராக உள்ள சபேதீன் அந்த அமைப்பின் அரசியல் விவகாரங்களை கவனித்து வருகிறார். சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சபேதீன் உயிர் தப்பினார் என்று கூறப்படுகிறது.

காட்டிக்கொடுத்த ஈரான் உளவாளி
நஸ்ரல்லாவின் இருப்பிடத்தை இஸ்ரேல் ராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தது ஹிஸ்புல்லா அமைப்பில் இருந்த ஈரானை சேர்ந்தவர் என்று பிரான்ஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஈரான்காரர் இஸ்ரேல் ராணுவத்தின் கைக்கூலி என்றும், வேவு பார்ப்பதற்காக அவரை இஸ்ரேல் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

60 அடி ஆழ சுரங்க அறையை தகர்த்த இஸ்ரேல் குண்டு
இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்ப நஸ்ரல்லா வெளியில் நடமாடுவதை அண்மை காலங்களில் குறைத்துக் கொண்டார். அடுக்குமாடி கட்டிடத்திற்கு கீழே தரையில் இருந்து 60 அடி ஆழத்தில் பாதுகாப்பான சுரங்க அறையில் தனது தளபதிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை நஸ்ரல்லா ஆலோசனை நடத்தினார். ஆனால், அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் அந்த பகுதி மீது குண்டு மழை பொழிந்தது. சுமார் 80 டன் பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகள் அங்கு வீசப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு தந்த 5000 பவுண்ட் பங்கர் பஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த சக்திவாய்ந்த குண்டுகள் 30 மீட்டர் ஆழம் வரை பாய்ந்து வெடித்து சிதறும் தன்மை கொண்டவை. இந்த குண்டுகள் வெடித்து சிதறிய அதிர்ச்சியில்தான் நஸ்ரல்லா உள்ளிட்டோர் பலியாகி உள்ளனர்.

The post அடுத்த தலைவராக அறிவிக்கப்பட இருந்த ஹிஸ்புல்லா துணை தளபதியும் இஸ்ரேல் தாக்குதலில் பலி: லெபனான் மீது குண்டு மழை பொழிவதால் பதற்றம் நீடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: