×

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததால் பக்தர்கள் அச்சமடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வாகனங்களில் மட்டுமின்றி பாதயாத்திரையாகவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல சந்திரகிரி அருகே வாரி மிட்டா மலைப்பாதையும், அலிபிரி பகுதியில் பிரதான மலைப்பாதையும் உள்ளது. இவற்றில் அலிபிரி மலைப்பாதையில் 24 மணி நேரமும் பக்தர்கள் நடமாட்டம் இருக்கும். ஆனால் அடர்ந்த வனப்பகுதியின் மையப்பகுதியில் வாரி மிட்டா பாதை இருப்பதால், இங்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த காலங்களில் ஏற்பட்ட சிறுத்தை தாக்குதல் அசம்பாவித சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் வாரிமிட்டா மலையடிவாரத்தில் பக்தர்கள் செல்லும் பாதையில் உள்ள தேவஸ்தான கட்டுப்பாட்டு அலுவலகம் அருகே சிறுத்தை நடமாடியுள்ளது. இதனைக்கண்ட இரவுக்காவலர் உடனடியாக தேவஸ்தான மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறை மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சி.சி.டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் தெரிந்தது. அங்குள்ள தெரு நாய்களை வேட்டையாட வந்த சிறுத்தை, மனித நடமாட்டம் காரணமாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கியது தெரிந்தது. இதனிடையே இன்று காலை 6 மணிக்கு வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து உஷாராக செல்லுமாறு தெரிவித்தனர். இதனால் அச்சத்துடன் பக்தர்கள் மலைப்பாதையில் சென்றனர்.

The post திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Pass ,Tirumala ,Tirupati mountain pass ,Tirupati Eyumalayan temple ,Tirupati ,Mita mountain ,Chandragiri, Alibiri ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும்...