×
Saravana Stores

மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என பூ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளனர். இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூ விவசாயம் செய்து வருகின்றனர். இங்கு கன்னியப்பபிள்ளைபட்டி, கொப்பையம்பட்டி, கொத்தப்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, சுந்தரராஜபுரம், சித்தார்பட்டி, தெப்பம்பட்டி, ஏத்தக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பூ விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு மல்லிகை பூ, மரிக்கொழுந்து, செண்டு பூ, செவ்வந்தி, கோழிக்கொண்டை, அரளி, பிச்சி, சம்மங்கி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தப் பகுதியில் மல்லிகை பூ சாகுபடி அதிகளவில் செய்து வருகின்றனர். இந்த பூக்கள் சாகுபடியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் மரிக்கொழுந்து சாகுபடி செய்து வருகின்றனர். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற மாதங்களில் அதிகளவு பூக்கள் வரத்து வரும். தண்ணீர் அதிகளவு தேவைப்படாத இந்த பூ விசாயத்தை விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் மூலமும் செய்து வருகின்றனர்.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள தெற்கு பகுதியில் ஆற்றுப் பாசனங்கள் எதுவும் கிடையாததால் கிணற்றுப் பாசனத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் வறட்சியால் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் சுரப்பு இல்லாததால் விவசாயம் சுருங்கி வந்தாலும், பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர்ந்து மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்து வருகின்றனர்.இந்த மரிக்கொழுந்து பயிர் மழைக்காலத்தில் பாதிப்படையும் என்பதால் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மரிக்கொழுந்து சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வருவதில்லை.

நடவு செய்து 45 முதல் 50 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். மரிக்கொழுந்து ஒரு மாதத்தில் தொடங்கி தொடர்ந்து 6 மாதம் வரை பலன் தரும். கோடை வெயிலை தாங்கி வளரும். ஆண்டிபட்டி பகுதியில் விளைவிக்கப்படும் மரிக்கொழுந்துகள் மதுரை மார்க்கெட்டிற்கு அதிகளவு அனுப்பப்படுகிறது.மதுரை மார்க்கெட்டில் இருந்து மரிக்கொழுந்தை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் ஆர்டரின் பெயரில் ஏஜென்சி மூலம் எசன்ஸ் தயாரிப்புக்கும் மொத்தமாக வாங்கி அனுப்பப்படுகிறது.‌

ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட மரிக்கொழுந்து கடந்த கோடை காலத்தில் அதிக அளவு விளைச்சலை கொடுத்தது. ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் அடிக்கடி மழை பெய்து வருகிறது. அதிக அளவு காற்றும் உள்ளது. இதனால் மரிக்கொழுந்து விளைச்சல் குறைந்துள்ளது. தற்போது ஆண்டிபட்டி மார்க்கெட்டில் மரிக்கொழுந்து கிலோ ரூ‌.80 முதல்‌ 100 வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.இந்தியாவில் காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சுமார் 1000 எக்டர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.மரிக்கொழுந்து ஓராண்டு வாழும் வகையை சார்ந்த பயிராகும். 45-80 செ.மீ. உயரம் நேராக வளரக்கூடிய இச்செடிகள் சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது. மாலைகளுக்கு உபயோகிப்பதற்காக பயிரிடப்படும் மரிக்கொழுந்து விதைத்ததில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் அறுவடை செய்யபடுவதால் எந்த பருவத்திலும் சாகுபடி செய்யலாம்.ஆனால், வாசனை எண்ணெய்க்காக நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மார்ச் வரை சாகுபடி செய்வது நல்லது. பின்பு மறுதாம்பு பயிரை ஏப்ரல், மே மாதங்களில் அறுவடை செய்யலாம்.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, இந்தாண்டு தொடக்கத்திலிருந்து ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் அதிக அளவு மழை பெய்யவில்லை. கிணற்று பாசனத்திலும் நீர் சுரப்பு இல்லாமல் உள்ளது.
இருந்தாலும் மரிக்கொழுந்து வெயிலை தாங்கி மகசூல் கொடுக்கும் என்பதால், இந்த‌ ஆண்டு கோடை வெயிலில் தண்ணீர் இல்லாமலும் கடினமான முறையில் சந்தைப்படுத்தினோம்.‌ மேலும்‌ தற்போது மரிக்கொழுந்து விளைச்சல் குறைந்துள்ளது. மரிக்கொழுந்து சென்ட் தொழிற்சாலைக்கு அதிகளவு தேவைப்படுகிறது. ஆண்டிபட்டி பகுதியில் சென்ட் தொழிற்சாலை இல்லாதது மரிக்கொழுந்து விலை ஓரளவு கூடுதலாகவும், குறைவாகவும் உள்ளது. தொடர்ந்து அதிகளவு விலை கிடைப்பதற்காக சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மனதுக்கு இதமானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மரிக்கொழுந்து ஆரோக்கியம் தரக்கூடியதாக விளங்குகிறது. பூஞ்சை காளான்கள், நோய் கிருமிகளை அழிக்கிறது. வலி, வீக்கத்தை சரிசெய்ய கூடியது. மன அழுத்தத்தை போக்கும் தன்மை உடையது.மரிக்கொழுந்து மணம் தரக்கூடியது. மனதுக்கு இதம் தரவல்லது. தூக்கத்தை வரவழைக்கும் தன்மை கொண்டது. விட்டு விட்டு ஏற்படும் வலியை போக்கும். மரிக்கொழுந்தை பயன்படுத்தி வயிற்றுவலி, தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். மரிக்கொழுந்தை பயன்படுத்தி வயிற்று வலி, தோல்நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.

The post மரிக்கொழுந்து, மல்லிகை, செண்டு, செவ்வந்திக்கு மவுசு ஆண்டிபட்டியில் வாசனை திரவிய தொழிற்சாலை appeared first on Dinakaran.

Tags : Dying, Jasmine, Sentu ,Mars Mouse Antibar Fragrance Factory ,Antidbar ,Theni district, ,Andipathi Union ,Dying, Jasmine, ,Sentu ,Mars Mousu ,Antibar Fragrance Factory ,Dinakaran ,
× RELATED பனை மரம் நடுவதை ஊக்குவிக்க நடவடிக்கை:...