88 ரன்னில் சுருண்டு ஃபாலோ ஆன்; தோல்வியின் பிடியில் நியூசிலாந்து

காலே: இலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், முதல் இன்னிங்சில் வெறும் 88 ரன்னுக்கு சுருண்டு ஃபாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 602 ரன் குவித்து (163.4 ஓவர்), முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கருணரத்னே 46, சண்டிமால் 116, மேத்யூஸ் 88, கமிந்து மெண்டிஸ் 182* ரன், குசால் 106* ரன் விளாசினர்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன் எடுத்திருந்தது (14 ஓவர்). கேன் வில்லியம்சன் 6, அஜாஸ் படேல் (0) இருவரும் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். நிஷான் பெய்ரிஸ் – பிரபாத் ஜெயசூரியா சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ரச்சின் 10, டேரில் மிட்செல் 13, சான்ட்னர் 29 ரன் எடுக்க, மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 88 ரன்னுக்கு (39.5 ஓவர்) ஆல் அவுட்டானது. ஓ’ரூர்கே 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூரியா 18 ஓவரில் 6 மெய்டன் உள்பட 42 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். நிஷான் பெய்ரிஸ் 3, அசிதா பெர்னாண்டோ 1 விக்கெட் வீழ்த்தினர்.514 ரன் பின்தங்கிய நிலையில் ஃபாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது.

லாதம் டக் அவுட்டாகி வெளியேற, கான்வே – வில்லியம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 97 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. கான்வே 61 ரன் (62 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), வில்லியம்சன் 46 ரன்னில் பெவிலியன் திரும்ப, டேரில் மிட்செல் 1, ரச்சின் 12 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். நியூசிலாந்து 121 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறிய நிலையில், டாம் பிளென்டல் – கிளென் பிலிப்ஸ் ஜோடி உறுதியுடன் போராடியது.

நியூசி. 41 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பிளண்டெல் 47 ரன், பிலிப்ஸ் 32 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை பந்துவீச்சில் நிஷான் பெய்ரிஸ் 3, பிரபாத், தனஞ்ஜெயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 5 விக்கெட் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 315 ரன் தேவை என்ற நிலையில் நியூசிலாந்து இன்று 4ம் நாள் சவாலை சந்திக்கிறது.

The post 88 ரன்னில் சுருண்டு ஃபாலோ ஆன்; தோல்வியின் பிடியில் நியூசிலாந்து appeared first on Dinakaran.

Related Stories: