சமூக பொறுப்பின்றி கால்வாய்களில் வீசி எறியப்படும் குப்பை தடுப்பு வலை அமைத்து கண்காணித்து உடனுக்குடன் அகற்றும் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து வடகிழக்கு பருவமழை சீசனில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நல்ல மழை பொழிவு இருந்தது. அதை கருத்தில் கொண்டு தான் சென்னையில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு அரசும், சென்னை மாநகராட்சியும் தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு மழைக்கே தாங்காது சென்னை என்பதை மாற்றி காட்டும் நடவடிக்கையில், சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அவை உடனடியாக வடியும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இப்படி இருக்க, வெள்ளத்தை தடுக்க எத்தனை திட்டங்கள் போட்டு அவற்றை செயல்படுத்தினாலும், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை சிலர் விடுவதாக இல்லை. குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை போடுவதற்கு சென்னை மாநகராட்சி இடம் ஒதுக்கினாலும், அங்கு கொண்டு செல்வதற்கு செலவாகும் என்பதை கருத்தில் கொண்டு, அருகில் உள்ள நீர்நிலைகளில் கொட்டி விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒருவர் கொட்டினால் போதும், தொடர்ந்து அந்த நீர்நிலைகளை குப்பை கிடங்காக பொதுமக்கள் மாற்றி விடுகின்றனர்.

இதுபோன்ற நீர்நிலை குப்பை கிடங்குகள் சென்னையில் பல இடங்களில் காணப்படுகிறது. அவற்றை தூர்வாரி தண்ணீர் செல்லும் அளவுக்கு பணிகள் நடந்தாலும், எதையும் கண்டு கொள்ளாமல் குப்பை கழிவுகளை கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் மழைகாலங்களில் நீர்நிலைகள் வழியாக மழைநீர் செல்ல முடியாமல் தடைபடுகிறது. எனவே, அப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. குப்பை கொட்டும் கிடங்காக சிலர் கால்வாய்களை பயன்படுத்துவது மழை காலங்களில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்பத்தும் என்பதை அறிவதில்லை.

வெள்ள நீரை கடலுக்கு கொண்டு செல்வதில் கால்வாய்கள் தான் முக்கிய பங்காற்றுகிறது. சென்னை நகருக்குள் செல்லும் முக்கிய கால்வாய்களில் தான் இந்த அவலங்கள் தொடருகின்றன. இந்த நிலையை மாற்றினால் தான் வெள்ள நீரை வெளியேற்றுவதில் ஏற்படும் சிக்கலை தடுக்க முடியும் என்று வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் தான் பருவமழை காலங்களுக்கு முன்பாகவே நீர்வழித்தடங்களில் தூர்வாரும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடர்ந்து செய்து வருகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றால், கால்வாய்களில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுத்தாக வேண்டும். அதன் அடிப்படையில், குப்பை கொட்டுவதை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. குறிப்பாக கட்டிட கழிவுகளை கொட்டுவது, சில வணிக நிறுவனங்கள் இறைச்சி கழிவு உள்ளிட்டவைகளை அருகில் உள்ள கால்வாய்களில் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இவ்வாறு குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க சென்னை மாநகராட்சி அபராதம் விதித்து வருகிறது.

அதையும் சட்டை செய்யாமல் அபராதத்தை கட்டி விட்டு மீண்டும் குப்பை கொட்டுவதை தொடரத்தான் செய்கின்றனர். இதை முற்றிலும் ஒழிக்கும் வகையில், இந்த மாதம் நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 10 மடங்காக உயர்த்தி அதிடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை சென்னை மாநகர பகுதிகளில் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறு ஆகிய ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட 31 கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவற்றில் 14 கால்வாய்கள் மாநகராட்சிக்கு சொந்தமானது. இருப்பினும் அனைத்து கால்வாய்களிலும் ஆகாயத் தாமரை செடிகள் மற்றும் மிதக்கும் கழிவுகளை அகற்றுவது போன்ற பராமரிப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இவற்றில் குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் கொடுங்கையூர் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், கொளத்தூர் தணிகாச்சலம் கால்வாய், மாம்பலம் கால்வாய், நுங்கம்பாக்கம் கால்வாய் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளை சமூக பொறுப்பின்றி வீசி எறிந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

இவை கால்வாய்களில் அடிக்கடி அடைப்பை ஏற்படுத்தி, கழிவுநீர் இயல்பாக வழிந்தோடுவதை தடுக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி, பொதுமக்களை பாடாய்படுத்துகிறது. அதை தடுக்க மாநகராட்சி பூச்சி கட்டுப்பாட்டு துறை தனியாக போராட வேண்டியுள்ளது. குப்பை கழிவுகளை பொதுமக்கள், வீடு வீடாக வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மக்கள் மனதில் மாற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வீசி எறியும் குப்பை கழிவுகள், கால்வாய்களில் அடித்து வரப்பட்டு மழைநீர் செல்வதை தடுக்கிறது.

இந்த குப்பை கழிவுகளை தடுத்து அகற்றும் விதமாக மாநகராட்சி சார்பில் கால்வாய்களில் தடுப்பு வலைகள் அமைக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. கால்வாய்களில் வலை அமைத்து, அங்கு தேங்கும் கழிவுகளை அவ்வப்போது கண்காணித்து அகற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அடிக்கடி நீர்வழிக் கால்வாய்களில் குப்பை போடுபவர்களை டிரோன்கள் மூலம் கண்காணித்து வருவதாகவும், விதிகளை மீறி குப்பை கொட்டுபவருக்கு அபராதம் விதிப்பதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மழைநீர் கால்வாய்களில் மிதந்து வரும் குப்பை கழிவுகளை அகற்றும் வகையில் தற்போது வலைகளை அமைத்து வருகிறோம். இதற்கு நல்ல பலன் கிடைத்து வருகிறது. அடைப்பு ஏற்படும் அளவுக்கு குப்பை சேரும் போது அவற்றை உடனுக்கு அகற்றுவதற்கும் எளிதாக உள்ளது. குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க சில இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் டிரோன்கள் மூலம் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சமூக பொறுப்பின்றி கால்வாய்களில் வீசி எறியப்படும் குப்பை தடுப்பு வலை அமைத்து கண்காணித்து உடனுக்குடன் அகற்றும் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: