×

மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு


சென்னை: மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் நகைகள் திருடிய வழக்கில், ரியல் எஸ்டேட் அதிபரின் அண்ணன் மருமகளை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 சவரன் நகைகளை மீட்டனர். மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெருவை சேர்ந்தவர் தங்கதுரை (52), ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தற்போது மகன், மகளுடன் வசித்து வருகிறார். உறவினர்கள் நிகழ்ச்சிக்காக கடந்த 9ம் தேதி வீட்டில் தனது மனைவியின் அறையில் பீரோவில் வைத்திருந்த நகைளை சரிபார்த்த போது 140 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது.

வீட்டில் வெளியாட்கள் யாரும் வரவில்லை, பூட்டுகள் எதுவும் உடைக்கப்படவில்லை, நகைகள் மட்டும் மாயமாகி இருந்ததால், உறவினர்கள் மீது சந்தேகமடைந்து தொழிலதிபர் சம்பவம் குறித்து மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலகுரு (கூடுதல் பொறுப்பு) சம்பவம் நடந்த அப்பர்சாமி கோயில் தெருவில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ரியல் எஸ்டேட் அதிபர் தங்கதுரையின் அண்ணன் மருமகள் பிரேமா (34) என்பவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

உடனே போலீசார் பிரேமாவை பிடித்து விசாரணை நடத்திய போது, தொழிலதிபர் மனைவி இறந்த பிறகு, அடிக்கடி பிரேமா, தங்கதுரையின் வீட்டிற்கு வந்து தங்கி சென்றதும், அப்போது, இரவு நேரங்களில் வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு, பீரோவை திறந்து சிறுக சிறுக நகைகள் திருடி சென்றதும் தெரியவந்தது. திருடிய நகைகளை பிரேமா தனது தாயிடம் கொடுத்து அதை விற்பனை செய்து, அதன் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் பிரேமாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. திருட்டு நகைகளை விற்பனை செய்த பிரேமாவின் தாயிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட பிரேமா தற்போது 9 மாத கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mayilapur ,Chennai ,Maylapur Apparsami Temple Street ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன மோசடி:...