சீன எல்லையில் இந்திய பீரங்கி பிரிவு நவீனமயம்: ராணுவ தளபதி அறிவிப்பு


புதுடெல்லி:இந்திய – சீன எல்லையில் இந்திய ராணுவத்தின் பீரங்கி பிரிவு நவீனமயமாக்கப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் அதோஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தில் பீரங்கி படைப்பிரிவு தொடங்கப்பட்டு இன்றுடன் 198 ஆண்டுகளாகின்றன. இதையொட்டி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பீரங்கி படைப்பிரிவு இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் அதோஷ் குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதோஷ் குமார், “தேசிய பாதுகாப்பு சவால்களை கருத்தில் கொண்டு பீரங்கி பிரிவுகளின் திறன்களை மேம்படுத்தும் விதமாக பல்வேறு உபகரணங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. தற்போது பீரங்கி படைப்பிரிவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நவீன மயமாக்கி வருகிறோம்.

தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மூலம் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கான மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகிறது. ராணுவத்தின் துப்பாக்கி சுடும் திறனை அதிகரிக்க வடக்கு எல்லையில் கே-9 வஜ்ரா, தனுஷ் மற்றும் ஷரங் உள்ளிட்ட 155 மிமீ துப்பாக்கி அமைப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. ராணுவம் ஏற்கனவே 100 கே-9 வஜ்ரா துப்பாக்கி அமைப்புகளை நிலைநிறுத்தி உள்ளது. மேலும் 100 கே-9 விமானங்களை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது” என்று கூறினார்.

The post சீன எல்லையில் இந்திய பீரங்கி பிரிவு நவீனமயம்: ராணுவ தளபதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: