வடமாநிலங்களில் மெட்ரோ திட்டத்திற்கு ரூ4 ஆயிரம் கோடி வழங்கும் ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு 4 ரூபாய் கூட தரவில்லை: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு


சென்னை: சென்னை ஓட்டேரி பிரிக்கிளின் சாலை சந்திப்பு, வெங்கட்டம்மாள் சமாதி தெரு பகுதியில் சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க நகர் தெற்கு பகுதி 76வது வட்ட திமுக சார்பில் திமுகவின் 75வது பவள விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: திராவிட தத்துவம் என்பது என்றைக்கும் தீராத ஒன்று. சமூகநீதி சுயமரியாதை என அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் இவற்றிற்கு தீர்வு ஏற்படும். ஆனால் இந்த திராவிட தத்துவம் என்பது காலத்திற்கு ஏற்ப பல வடிவங்களாக மாறிக்கொண்டேதான் செல்கிறது.

வட மாநிலங்களில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிக்காக ரூ.4000 கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 4 ரூபாய் கூட கொடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். திராவிடர் கழகத்தின் பிரசார செயலாளர் அருள்மொழி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். திரு.வி.க நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, வர்த்தக அணி அமைப்பாளர் லயன் உதயசங்கர், 76வது வட்ட திமுக செயலாளர் சசிகுமார், பகுதி செயலாளர்கள் சாமிக்கண்ணு, தமிழ்வேந்தன், 76வது வட்ட செயலாளர் வெங்கடேசன், உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post வடமாநிலங்களில் மெட்ரோ திட்டத்திற்கு ரூ4 ஆயிரம் கோடி வழங்கும் ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு 4 ரூபாய் கூட தரவில்லை: அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: