தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி உணவில் கலப்படம் குறித்து விழிப்புணர்வு: கலெக்டர் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில், மாவட்ட அளவிலான தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சியை, சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று தொடங்கி வைத்து, “ஆரோக்கியமான மக்களால் ஆனதே வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  தொடர்ந்து, ஊட்டச்சத்து குறித்த வினாடி வினா போட்டிகள் மற்றும் சுவரொட்டிகள் தயாரித்தல் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்ற 3 மாணவியருக்கு கலெக்டர் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், உணவில் ஏற்படும் கலப்படங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களால் மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர், ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பேசியதாவது: சென்னை மாவட்டத்தில் 30,59,967 மக்கள் தொகையில் 13,832 கர்ப்பிணிகள், 11,527 பாலூட்டும் தாய்மார்கள், 0-6 வயதுடைய 89,107 குழந்தைகள், 68,340 வளரிளம் பெண்கள் உள்ளனர். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் ஊட்டச்சத்து இணை உணவு முன்பருவக் கல்வி, மதிய உணவு, எடை உயரம் எடுத்தல், ஊட்டச்சத்து கண்காணித்தல், மருத்துவப் பரிந்துரை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வளரிளம் பெண்களுக்கு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. தேசிய ஊட்டச்சத்து மாதம் செப்டம்பர் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் ரத்த சோகை குறித்து விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி மாணவியருக்கு ஊட்டச்சத்து குறித்தும், ஊட்டச்சத்து குறைபாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி உணவில் கலப்படம் குறித்து விழிப்புணர்வு: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: