×

பத்திரப்பதிவு செய்யாத நிலங்களுக்கு வரி வசூல் செய்ய உயர்மட்ட குழு: மாநகராட்சி ஆணையர் தகவல்


சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று நடந்தது. துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் பொறுப்பு லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்களின் விவாதம் வருமாறு: ஜெயராமன் (மார்க்சிஸ்ட்): எனது பகுதியில் கடந்த ஒன்றை ஆண்டுகளாக 200 சாலைகள் மோசமாக உள்ளதாக கூறி வருகிறேன். 42 சாலைகள் தான் போடப்பட்டுள்ளது. மீதமுள்ள சாலைகள் சீரமைக்கப்படவில்லை. நிலை குழு தலைவர் விஸ்வநாதன்: பத்திரப்பதிவு செய்யப்படாத நிலங்களுக்கு வரி விதிக்க நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் பதில் இல்லை. மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுங்கள். சென்னை மாநகரில் 500க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களில் உள்ள கடைகள் வாடகை அதிகம் என்பதால் 10 ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. எனவே, வாடகையை குறைக்க வேண்டும்.

துணை மேயர் மகேஷ் குமார்: பல்வேறு கவுன்சிலர்களின் கோரிக்கையும் இதுவாக உள்ளது. எனவே, பத்திர பதிவு செய்யப்படாத இடங்களுக்கு வரி விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக வளாகங்களில் வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையர் (பொறுப்பு) லலிதா: பத்திரப்பதிவு செய்யப்படாத நிலங்களுக்கு, வீட்டு மனைகளுக்கு வரி வசூலிப்பது குறித்து அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரச்னை தொடர்பாக உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்ணன் (திமுக): மாநகராட்சிக்கு தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பல ஊழியர்கள் நீண்ட தூரத்திலிருந்து வந்து பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு அருகில் உள்ள இடங்களில் பணி வழங்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் நேரத்தில் அடையாறு ஆற்றில் இன்னும் சரியாக தூர்வாரப்படவில்லை.

பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை இந்த பணிகளை வேகப்படுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்த வேண்டும். சென்னை மாநகர சாலைகளில் பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. அவற்றை தடுக்கும் வகையில் உடனடியாக பேட்ஜ் ஒர்க் செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கப்படும் ஓ.எஸ்.ஆர் நிலங்களை அவர்களே பூட்டி வைத்துக் கொள்கின்றனர். அவற்றை சென்னை மாநகராட்சி மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மண்டல குழு தலைவர் ராமலிங்கம்: உறுப்பினர்கள் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பிரச்னைகளை பற்றி தான் பேச வேண்டும். பொதுவாக சென்னை மாநகரை பற்றி பேசிக் கொண்டிருக்கக் கூடாது. எல்லோரும் அப்படி பேச ஆரம்பித்தால் தங்கள் வார்டுகளில் உள்ள குறைகளை சொல்ல நேரம் கிடைக்காது.

வார்டுகளில் உள்ள குறைகளை சொன்னால் மேயர் அதற்கு பதிலளித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும். மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன்: கடந்த மழையிலும் எங்கள் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. நாராயணபுரம் ஏரி உடைப்பு ஏற்பட்டது. அடையாறு தூர்வாரப்படவில்லை. இதனால் மாநகராட்சிக்கும், அரசுக்கும் மழைக்காலத்தில் கெட்ட பெயர் ஏற்படுகிறது. மேயர் பிரியா: சென்னை நகரின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் வகுக்கப்பட்டு, நிதி ஒதுக்கி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சில பணிகளில் உள்ள பராமரிப்பு குறைபாடுகளை ெகாண்டு ஒட்டுமொத்தமாக சொல்லக் கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.

தனியார்மயத்திற்கு எதிர்ப்பு
அம்பேத்கர் வளவன் (விசிக) பேசுகையில், சென்னையில் உள்ள இந்து மயான பூமிகளை தனியாருக்கு பராமரிக்க ஒப்பந்த அடிப்படையில் வழங்கக் கூடாது. கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவை மக்களுக்கு சேவை மனப்பான்மையில் வழங்கப்படுகிறது. அதுபோன்று தான் மயான பூமியும். அதை தனியாரிடம் ஒப்படைத்தால் மயான பூமியை ஒவ்வொரு சமூகமும் பிரித்துக் கொள்ள வழி வகுக்கும். இது மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்திவிடும். அதனால் தனியாருக்கு வழங்குவதை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.

சேகுவாரா (விசிக) பேசுகையில், வாழும் போது தான் தனித்தனியாக பிரிந்து வாழ்கிறோம். இறக்கும் போது மயானத்திலாவது அனைவரும் ஒன்றாக இருப்போம். அதையும் தனியாக பிரித்து விடாதீர்கள். கிராம பகுதிகளில் ஒவ்வொரு சமூகத்திற்கு தனித் தனி மயான பூமி உள்ளது. சென்னையில் மட்டும் தான் மயானம் அனைத்து சமூகத்திற்கும் ஒன்றாக இருக்கிறது. அதனால் மாநகராட்சியே மயான பூமியை பராமரிக்க வேண்டும்’’ என்றார். மேயர் பிரியா, இந்த பிரச்னை குறித்து முறையான ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

மேயர் டென்ஷன்
கூட்டத்தில் மதியழகன் (திமுக) பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகும் சேதமடைந்த சாலைகள், வடிகால், மின்விளக்கு உள்ளிட்ட பகுதிகளை சரி செய்வதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு வார்டுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி போதவில்லை. எனவே, பராமரிப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து கவுன்சிலர்களும் ஒட்டுமொத்தமாக ஆமோதித்து குரல் கொடுத்தனர். இதனால் கோபமடைந்த மேயர் பிரியா, மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக கருத்து தெரிவித்தால் தான் பதில் குறிப்பிட முடியும். மேலும் கடந்த மழைக்காலத்துக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நிதியாக ரூ.10 லட்சம் உட்பட ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மாகநராட்சி ஆணையருடன் ஆலோசித்து பராமரிப்பு நிதியை ரூ.10லட்சமாக உயர்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும், என்றார்.

சுழற்சி முறையில் பதவி
சொத்து வரியை ஆண்டுதோறும் 6 சதவீதம் தாமாகவே உயர்த்தி கொள்ளும் தீர்மானம் விவாதத்துக்கு வந்த போது கவுன்சிலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் சிவ ராஜசேகரன் இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுகையில்,‘‘ சொத்து வரி 6 சதவீத உயர்வு என்பது ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே இந்த தீர்மானத்தை ரத்து செய்து மக்களின் சுமையை குறைக்க வேண்டும். மேலும், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மாநகராட்சிகளில் இருப்பது போல் மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள் பதவியை சுழற்சி முறையில் வழங்க வேண்டும். இதனால் மேலும் சில உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவருக்கு அந்த பணிக் காலத்தை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய ஆவன செய்ய வேண்டும்’’ என்றார்.

The post பத்திரப்பதிவு செய்யாத நிலங்களுக்கு வரி வசூல் செய்ய உயர்மட்ட குழு: மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : High Level Committee for Collection of Tax on Non-Deeded Lands ,Corporation Commissioner Information ,Chennai ,Chennai Corporation Council ,Ribbon Palace ,Mayor ,Priya ,Deputy ,Mahesh Kumar ,Lalitha ,Jayaraman ,Marxist ,High ,collect ,on non ,Corporation Commissioner ,Dinakaran ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!