சிறுகுறு தொழில்கள் அழிந்துவிட்டன; பிரதமர் மோடியின் மாடல் வேலைகளை பறித்துள்ளது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் ஏகபோக மாதிரி மாடல் சிறுகுறு தொழில்களை அழித்ததுடன், வேலைகளையும் பறித்துவிட்டது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். ஜம்முவில் அகில இந்திய வல்லுநர்கள் காங்கிரஸ் நடத்திய நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசிய வீடியோ நேற்று வெளியிடப்பட்டது. அதில் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் ஏகபோக மாடல் வேலைகளை பறித்துவிட்டது. சிறுகுறு தொழில்களை பேரழிவிற்கு உட்படுத்தியது. இதனால் மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்துவிட்டனர். மோசமான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற திறமையற்ற கொள்கைகள் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல் இந்தியாவை உற்பத்தி செய்யும் பொருளாதாரத்தில் இருந்து நுகர்வு பொருளாதாரமாக மாற்றியுள்ளது.

இந்த விகிதத்தில் நாம் சீனாவுடன் போட்டியிடவோ அல்லது அனைத்து இந்தியர்களின் செழிப்பை உறுதிப்படுத்தவோ முடியாது. இந்தியா சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், நாம் ஜிஎஸ்டியை எளிதாக்க வேண்டும். பரந்த வாய்ப்பு மற்றும் வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்க சிறு வணிகங்களுக்கு வங்கி முறையைத் திறக்க வேண்டும். வேலையின்மைக்கான ஒரே பெரிய காரணம், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களான வேலைவாய்ப்பின் அடிப்படை அமைப்புகள் 5 முதல் 10 பெரிய ஏகபோக நிறுவனங்களின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதுதான் காரணம். இந்த பெரிய ஏகபோக நிறுவனங்கள் அரசியல் அமைப்பின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

The post சிறுகுறு தொழில்கள் அழிந்துவிட்டன; பிரதமர் மோடியின் மாடல் வேலைகளை பறித்துள்ளது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: