லட்டு பிரசாத விவகாரம் எதிரொலி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜெகன்மோகன் இன்று மாலை வருகை

திருமலை: லட்டு பிரசாத விவகாரம் காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசித்துவிட்டு சிறப்பு பிராயசித்த பூஜை செய்வதற்காக முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் இன்று மாலை திருப்பதி வருகிறார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாத விவகாரம் குறித்து ஐஜி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது. லட்டு விவகாரத்தில் பிராயசித்தமாக துணைமுதல்வர் பவன்கல்யாண் தற்போது விரதம் இருந்து வருகிறார். வரும் 30ம்தேதி விரதத்தை முடித்துக்கொண்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.

இந்நிலையில் லட்டு விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆதாயம் தேட முயற்சிப்பதாக கூறி மாநிலம் முழுவதும் ஒய்எஸ்ஆர் காங்கிரசார் சார்பில் நாளை முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் நாளை காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்து திருமலையில் சிறப்பு பிராயசித்த பூஜை செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதையொட்டி இன்று மாலை விமானம் மூலம் ஜெகன்மோகன் திருப்பதிக்கு வருகிறார். இந்நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்குதேசம், பாஜக மற்றும் இந்து அமைப்பினர் ஒன்றிணைந்து இன்று மாலை திருப்பதி முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் ஏழுமலையான் கோயிலுக்கு ஜெகன்மோகன் செல்லவிரும்பினால் தேவஸ்தானத்தின் பதிவேட்டில் கையெழுத்திடவேண்டும், இந்து மதம் மீது அவருக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால் கபிலதீர்த்தத்தில் மொட்டையடித்து நாமம் இட்டு அதன்பின்னர் திருமலைக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் திருமலைக்கு செல்லும்போது அவருக்கு இடையூறு செய்வோம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜெகன்மோகன் வருகை முன்னிட்டு திருப்பதி முழுவதும் கூட்டங்கள் நடத்தவும், சாலைகளில் திரளவும் தடைவிதித்து எஸ்பி சுப்பாராயுடு உத்தரவிட்டுள்ளார்.

The post லட்டு பிரசாத விவகாரம் எதிரொலி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜெகன்மோகன் இன்று மாலை வருகை appeared first on Dinakaran.

Related Stories: