உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே ஏழுமலையானை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தரிசிக்க வேண்டும்

*செயல் அதிகாரியிடம் பாஜகவினர் கோரிக்கை மனு

திருமலை : உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே திருப்பதி ஏழுமலையானை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தரிசிக்க வேண்டும் என்று செயல் அதிகாரியிடம் பாஜகவினர் கோரிக்கை மனு அளித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பொய் கூறி அவதூறு பிரச்சாரம் செய்து இருப்பதாகவும், தேவஸ்தானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் செய்ததால் அதன் களங்கத்தை போக்க ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நாளை (சனிக்கிழமை) மாநிலம் முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜை செய்யவும் அக்கட்சியின் தலைவர் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று ஏழுமலையானை வழிபட இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி தலைமையில் திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் செயல் அதிகாரி ஷியாமளா ராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்து மதம் அல்லாத மாற்று மதத்தவர்கள் ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு செல்லும்போது அங்குள்ள உறுதிமொழி பத்திரத்தில் நான் சனாதன தர்மத்தை கவுரவித்து ஏழுமலையான் மீது மிகுந்த பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்கிறேன் என்று கையெழுத்திட்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

ஆனால் கடந்த காலங்களில் ஜெகன் மோகன் ரெட்டி அதனை கடைபிடிக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் ஆட்சியில் பல முறைகேடு செய்து பிரசாத நெய்யில் கலப்படம் செய்த நிலையில் அவர் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஜெகன்மோகன் தேவஸ்தான நிபந்தனையை கடைபிடித்து அவர் நடந்து செல்லட்டும். அல்லது அங்கபிரதட்சனம் செய்து செல்லட்டும். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது மாவட்ட தலைவர் சாமஞ்சி சினிவாஸ், நகர தலைவர் வரப்பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே ஏழுமலையானை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தரிசிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: