அம்பை, கல்லிடைக்குறிச்சி பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

*விரைவில் தீர்வு காணப்படுமா?

அம்பை : அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பஜார் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளால் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத்தீர்வு காணப்படுமா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அம்பாசமுத்திரம் நகராட்சியில் மெயின் பஜாரில் ஆக்கிரமிப்பால் வாகனங்கள் சிக்கி திணறி வருவதால் வாகன ஓட்டிகள் படாத பாடுபடுகின்றனர். அம்பைக்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினமும் பொருட்களை வாங்கி செல்லவும், காய்கறிகள், வாழை இலை, பூ ஆகியவைகளை விற்பனை செய்யவும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், விவசாயிகள் வந்து செல்கின்றனர்.

மேலும் நீதிமன்றம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல்நிலையம், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பொதுப்பணித்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பள்ளி, கல்லூரிக்கு என தினமும் ஏராளமானோர் அம்பைக்கு வருவதால் மெயின் பஜாரில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

மெயின் பஜார் குறுகலான பகுதியாக இருப்பதால் இரு வாகனங்கள் விலகி செல்வதில் சிரமம் ஏற்படுகிறது, இதனால் காலை, மாலை வேளைகளில் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் என ஒரே நேரத்தில் கார், ஆட்டோ, பைக், பஸ் என செல்வதால் அத்தகைய நேரங்களில் 200 மீட்டர் தூரத்தை கடக்க அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இதனால் உரிய நேரத்திற்கு பஸ்களை இயக்க முடியாமலும், செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இதேபோன்று கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் அம்ரூத் குடிநீர் திட்டப்பணிகளுக்காக நகரின் பிரதான சாலையான 6ம் நம்பர் ரோட்டில் மெயின் பஜாரில் இருந்து கோட்டைத்தெரு வரையிலும் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக இருப்பதாலும், சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும் காலை, மாலை வேளைகளில் பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கல்லிடைக்குறிச்சியில் கன்னடியன் கால்வாய் பாசன விவசாயிகள் வயலுக்கு செல்லவும், பக்தர்கள் கோயில்களுக்கு செல்லவும், தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிக்க செல்லவும், மாட்டு வண்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அம்பைக்கு செல்லவும் பயன்படுத்தி வந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகிலுள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்தில் இருந்து வாழ உகந்த அம்மன் கோயில் வழியாக ஆயிரங்கால் மண்டபத்திற்கு செல்லும் சாலை நீர்வளத்துறையினரால் பராமரிப்பின்றியும், தனியார் ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாலும் மக்கள் அந்தப்பாதையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மேலும் சாலை ஆக்கிரமிப்புகளாலும், குடிநீர் குழாய் பதிப்பதால் குண்டும், குழியுமாக சிதிலமடைந்த நிலையில் உள்ள 6ம் ரோட்டை சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடேயே பராமரிப்பின்றி சிதிலமடைந்த கன்னடியன் பாதையையும் உடனடியாக சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். இதேபோன்று அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி பஜார் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளால் தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் திண்டாடி வரும் பொதுமக்களுக்கு நிரந்தரத்தீர்வு காணப்படுமா? என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுமா?

அம்பை நகரின் முக்கிய சந்திப்பாக இருக்கும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ள பூக்கடை பஜார் பகுதியில் காலை முதல் இரவு வரை போக்குவரத்தை சரி செய்ய காவல்துறை தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கண்காணிப்பு கோபுரம் அமைத்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அம்பை, கல்லிடைக்குறிச்சி பஜார் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Related Stories: