தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி

*கலெக்டர் தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரி : பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் 2 லட்சம் நாட்டின மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், பெண்ணேஸ்வரமடம் தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக, மீன்வளத்தை அதிகரிக்கும் வகையில், ₹3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 2 லட்சம் நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் பணியை, மாவட்ட கலெக்டர் சரயு நேற்று தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் கிருஷ்ணகிரி, பாரூர், பாம்பாறு, ஓசூர் மற்றும் சூளகிரி சின்னாறு அணைகளில் மீன்வளர்ப்பு பணிகளும், கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணை, பாம்பாறு அரசு மீன் பண்ணை மற்றும் ஓசூர் மீன் பண்ணைகளில் மீன்குஞ்சுகள் வளர்த்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி மீன் பண்ணையில் வளர்க்கப்படும் மீன் குஞ்சுகள் தென்பெண்ணையாறு மற்றும் காவிரி ஆற்றில் விடப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு 1.60 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்த்து தென்பெண்ணை மற்றும் காவிரி ஆற்றில் விடப்பட்டது. மீன் நுகர்வு அதிகரித்ததால், கூடுதலாக மீன் குஞ்சுகள் வளர்த்து ஆற்றில் விட மீனவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 2023ம் ஆண்டு 3 லட்சம் மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டது. நடப்பாண்டு 4 லட்சம் மீன் குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை மீன் விதைப்பண்ணையில் இருந்து, மீன் குஞ்சுகள் வாங்கி, கிருஷ்ணகிரி அணை அரசு மீன் பண்ணையில் 45 நாட்கள் வளர்க்கப்பட்ட ரோகு, மிர்கால், கட்லா, கல்லாசு மற்றும் சேல்கெண்டை ஆகிய 5 ரக மீன் குஞ்சுகள், 5 சென்டி மீட்டருக்கு மேல் வளர்ந்த நிலையில், தென்பெண்ணை மற்றும் காவிரி ஆற்றில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கு தென்பெண்ணை மற்றும் காவிரி ஆற்றில் 4 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் பணி, தற்போது தொடங்கப்பட்டு, இன்று (நேற்று) ஒரே நாளில் ₹3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் பெண்ணேஸ்வரடம் தென்பெண்ணை ஆற்றில் விடப்பட்டது.

தமிழ்நாட்டின் ஆறுகளில் பெரும்பாலான நாட்டின மீன் இனங்கள் உள்ளன. பெரும்பாலான ஆறுகளில், பல்வேறு காரணங்களால் நாட்டின மீன் இனங்கள் அழிந்து வருகின்றன.நாட்டின மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம், உயிரினங்களின் உயிர்ச்சமநிலையை பாதுகாக்க முடியும். அழிந்து வரும் நிலையிலுள்ள மீன்களை பேணி பாதுகாத்து, அதனை உற்பத்தி செய்து, அதன் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்க முடியும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.

ஆண்டிற்கு 15 ஆயிரம் டன் அளவிற்கு மீன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆறுகளில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்வதன் மூலம், நிலையான மீன் உற்பத்தி மற்றும் பல்லுயிர் உற்பத்தியை பாதுகாக்க முடியும். மீன்களின் வாழ்விடம் சிதைவடைதலை தடுக்க முடியும். மீனவர்களின் சமூக பொருளாதார நிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பை பேணிக்காக்க முடியும். மீனவர்கள் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் மீன் பிடிக்கும் போது, கொசுவலைகளை பயன்படுத்தக்கூடாது. மீனவர்கள் சிறிய ரக மீன் குஞ்சுகள், சினை மீன்கள் பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இது வளம் குன்றா மீன் உற்பத்தியை அதிகரிக்கும். ஆறுகளில் வெடி வைத்து மீன் பிடித்தல், மீன்களின் வாழ்விடத்தை சிதைப்பது மட்டுமல்லாது, மீன் உற்பத்தியை கணிசமாக குறைத்துவிடும். மீனவர்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளில் மீன்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். மீனவர்கள் தினசரி பிடிக்கும் மீன்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தர்மபுரி மீன்வளத்துறை துணை இயக்குநர் சுப்பிரமணி, மீன்வளத்துறை ஆய்வாளர் கதிர்வேல், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், கிருஷ்ணகிரி தாசில்தார் பொன்னாலா, பெண்ணேஸ்வரமடம் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் 2 லட்சம் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் பணி appeared first on Dinakaran.

Related Stories: