பகுதி 1
வசிஷ்டரின் பர்ணசாலை, கோசலை நாட்டின் தலைநகர் அயோத்தி நகரில் அமைந்திருந்தது. நகரத்தின் நுழைவாயிலை ஒட்டி ஒரு பெரிய நந்தவனத்திற்கு நடுவில் தர்ப்பைப் புற்களால் வேயப்பட்ட கூரையுடனான ஆசிரமம். அங்கிருந்து இரண்டு காத தூரத்தில் சரயு நதி ஓடிக்கொண்டிருந்தது.அந்த அதிகாலைப் பொழுதில், அந்த இளைஞன் தன் பொருட்களை சற்று ஓரமாக வைத்துவிட்டு ஆசிரமத்தின் வாசலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான். ‘குருப்யோ நமஹ’ – மிகவும் பயபக்தியுடன் உச்சரித்தபடி நின்று கொண்டிருந்தான்.
‘‘அமைச்சர் சுமந்திரன் சொல்லி அனுப்பிய சந்திர சூடன் நீ தானா?”
‘‘ஆமாம். ஆமாம்.” வேகமாகத் தலையை ஆட்டினான்.
‘‘நல்லது நல்லது. உன் வருகை உனக்கு மிகவும் நலன் உள்ளதாக அமையட்டும். நம் குரு உன்னை ஆசீர்வதிப்பாராக! என் பெயர் சூரிய தாசன். உன் தோற்றம் எனக்கு நீ ஏற்கனவே பழக்கப்பட்டவன் போன்ற ஒரு சினேகத்தை அளிக்கிறது. நீ என்னுடனேயே தங்கிக்கொள்.’’‘‘உன்னுடைய வாத்ஸ்யல்யம் எனக்கு சந்தோஷம் அளிக்கிறது. உன்னைத் தமையன் என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.எனக்கு வசிஷ்டர் – நமது குருவைப் பற்றி நீங்கள் சொல்லி நான் அறிந்து கொள்ள வேண்டும்.
எனக்கு அவர் ஒரு மாபெரும் தவ புருஷர் என்பது மட்டுமே தெரியும்.’’‘‘நிச்சயமாக! நாம், பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால், நம் மூதாதையர்கள் நமக்கு செய்த ஆசீர்வாதங்களால் மட்டுமே இன்று இந்த இடத்தில் நின்று பேச முடிகிறது.’’‘‘நமது குரு வசிஷ்டரின் மேன்மையைப் பற்றி நான் விவரிப்பது என்பது ஒரு சிறு கூழாங்கல் இமயமலையைப் பற்றிக் கூறுவதற்கு ஒப்பாகும். இருப்பினும் நம் குருவின் பாதம் பணிந்து அவரைப் பற்றிச் சிலவற்றை உன்னிடம் கூறுகிறேன்.’’
சூரியதாசன் தொடர்ந்தான்,‘‘வசிஷ்டர், ஒரு பிரம்ம ரிஷி. ஏழு புகழ்பெற்ற, சப்தரிஷிகளுள் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல ஸ்லோகங்கள் ரிக்வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் உள்ளது.’’‘‘ஆதி காலத்தில் பிரம்மா படைப்புத் தொழிலை செய்து வந்தபோது பிரஜாபதிகள் என்னும் பத்து பேரை முதலில் உண்டாக்கினார். அவர்கள் பல்லாயிரக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களை உருவாக்கி இந்த உலகத்தை சிருஷ்டித்ததாக ஒரு வரலாறும் உண்டு.
அந்த பத்துப் பேரில் ஒருவரானவர் வசிஷ்டர். அதனால் வசிஷ்டர் பிரம்மாவின் பிள்ளை என்கின்றது ஒரு புராணம். வசிஷ்டரின் மனைவி அருந்ததி. இவள் மிகச் சிறந்த பதிவிரதை. பத்தினி கடவுளாக போற்றப்படுகிறார். இன்று கூட கணவரைப் போலவே மகா தபஸ்வியாக வாழ்கின்றவள்.’’“திருமணங்களில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் பழக்கம் இன்றும் உண்டு. மணமகளுக்கு மிகச் சிறிய நட்சத்திரமான அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டும் மணமகன் ‘இவள் அருந்ததியை உதாரணமாக கடைப்பிடித்து வாழ வேண்டும்’ என்று சொல்லும் சடங்கு மிக நயமானது. வசிஷ்டரை விட்டுப் பிரியாத பாக்கியம் பெற்றவள் அருந்ததி.
எந்தத் தேவர்களாலும் முனிவர்களாலும் ரிஷிகளாலும் கட்டுப்படுத்த முடியாத ஆசை மற்றும் கோபத்தைத் தனது ஆன்ம நோன்புகளால் வெற்றி கொண்டு, அவை – ஆசையும் கோபமும், தினந்தோறும் இரவுகளில் அவரது கால்களைப் பிடித்துவிடும்படி வாழ்வை அமைத்துக் கொண்டவர், என்ற சிறப்பைப் பெற்றவர்.”“பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து வெளிப்பட்ட, நந்தினி எனும் காமதேனு பசுவானது இவரது ஆசிரமத்திலேயே வாசம் செய்ய விருப்பப்பட்டதாகக் கூறியது ஒரு பெரிய சிறப்பு.”“ஒரு சாம்ராஜ்யம் தர்ம பரிபாலனம் செய்வதற்கு மிக முக்கியமான காரணம் அந்த சாம்ராஜ்யத்திற்கு வாய்த்த குல குருவே. வசிஷ்டர் சூரிய குலத்தின் குலகுரு. அயோத்தியில் தசரதர் அவையில் வசிஷ்டருக்கு மாபெரும் அங்கம் உண்டு.”
“ஒரு நாள் தசரதர் வசிஷ்டரை வணங்கி, ‘‘எங்கள் குல குருவே! நான் கிட்டத்தட்ட அறுபதினாயிரம் ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு வந்துவிட்டேன் . எனக்குப் பிறகு நான் இதுவரைக் காத்து வந்த தர்மத்தையும் அறத்தையும் பேணுவதற்கும், இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் கண் போல காப்பதற்கும் ஒரு வாரிசு எ னக்கு வேண்டும்.’’ என்று வேண்டிக் கேட்டுக்கொண்டார்.”“இதைக் கேட்ட உடனே வசிஷ்டர் தன் ஞான திருஷ்டியில் தோன்றியவற்றை உற்றுக் கவனித்தார்.
பின் கண்களைத் திறந்து தசரதரை நோக்கி,” நீ இதற்காக ஒரு வேள்வியை நடத்த வேண்டும். அதை நடத்த வல்லவர் ரிஷிய சிருங்கர் என்று அழைக்கப்படுகின்ற கலைக் கோட்டு முனிவர்.”
வசிஷ்டரின் அறிவுரையின் படி ரிஷியசிருங்க முனிவரை அழைத்து, அயோத்தியில் அஸ்வமேத யாகமும் அதே ஹோம குண்டத்தில் புத்திர காமேஷ்டி யாகமும் செய்தார்.”
“புத்திர காமேஷ்டி யாகம் முடியும் தருவாயில் அதிலிருந்து ஒரு சிறிய பூதம் வெளிப்பட்டது. அதன் கைகளில் ஒரு தங்கக் கிண்ணத்தில் அமுத பிண்டத்தை எடுத்து வந்து அங்கே இருந்த ஒரு தங்கத் தாம்பாளத்தில் வைத்துவிட்டு மீண்டும் யாகத் தீயில் மறைந்து விட்டது.”
“தசரதன் அந்த தங்கக் கிண்ணத்திலிருந்து அமுத பிண்டத்தை எடுத்து ஒரு பகுதியை கோசலைக்கும், இன்னொரு பகுதியை கைகேயிக்கும், மற்றொரு பகுதியை சுமித்திரைக்கும் அளித்தான். மீதமிருந்த அமுத பிண்டத்தை ஒன்று திரட்டி மீண்டும் சுமித்திரைக்கே அளித்தான்.”“மூன்று பட்டத்து மகிஷிகளும் தங்களுக்கு அளிக்கப்பட்ட அமுத பிண்டத்தைப் புசித்தார்கள். வேள்வி முடிந்த பிறகு தசரதன் மூன்று பட்டத்து மகிஷிகளுடன் தங்களின் குல தெய்வமான ரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு வந்தார்.மூன்று பட்டத்து மகிஷிகளும் கருவுற்றார்கள்.
கௌசல்யைக்கு சித்திரை மாதம், புனர்பூச நட்சத்திரம் கடக லக்னத்தில் கார்மேக வண்ணத்தில் ஆண் குழந்தையும், கைகேயிக்கு பூச நட்சத்திரம் மீன லக்னத்தில் ஆண் குழந்தையும், சுமித்திரைக்கு ஆயில்ய நட்சத்திரம் கடக லக்னத்தில் ஆண் குழந்தையும், மக நட்சத்திரம் சிம்ம லக்னத்தில் மற்றொரு ஆண் குழந்தையும் பிறந்தன.”அயோத்தி நகரமே இந்த நான்கு குழந்தைகளின் ஜனனத்தால் மிகவும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறது. நீ இங்கு இப்பொழுது வந்திருப்பது மிகவும் பொருத்தமானது. வாண வேடிக்கைகள், கூத்துகள், நடனங்கள், பாடல் நிகழ்ச்சிகள், மேலும் பல கேளிக்கைகள் நடந்த வண்ணம் உள்ளன.”
“அயோத்தி நகரம் முழுவதும் ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து அன்னதானம் மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இது தவிர அந்தணர்கள் வேதங்கள் மந்திரகோஷங்கள் என்று நிகழ்த்தியபடி இருக்கிறார்கள். இதையொட்டி அயோத்தி அரசர் தசரதர் வரப் போகின்ற ஏழு வருடங்களுக்கும் வரி எதுவும் விதிக்கப் போவதில்லை என்ற அறிவிப்பை அறிவித்திருக்கிறார். எல்லோருக்கும் ஆடை மற்றும் ஆபரணங்கள், வெகுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அயோத்தி நகரமே மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைத்திருக்கிறது.”சூரிய தாசன் சொன்னதைக் கேட்ட சந்திர சூடனுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது.
‘‘நீ குழந்தைகளைப் பார்த்து விட்டாயா எப்படி இருக்கிறார்கள்?”
‘‘இன்னும் இல்லை. கண்டிப்பாக நம்முடைய குரு நம்மையெல்லாம் அங்கு அழைத்துச் செல்வார். அப்பொழுது பார்க்கலாம்.”“கௌசல்யாவின் குழந்தை மரகத நிறத்திலும், கைகேயியின் குழந்தை வெண் பச்சை நிறம், சுமித்திரையின் ஒரு குழந்தை பொன் நிறம், மற்றொரு குழந்தை பால் நிறத்திலும் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.” “சந்திரசூடா! இன்று நாம் அயோத்தியின் அரண்மனைக்குச் செல்லவிருக்கிறோம். வசிஷ்டர் எல்லா சிஷ்யர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல இருக்கிறார். இன்று தசரத மகாராஜாவின் நான்கு புதல்வர்களுக்கும் பெயர் சூட்டும் வைபவம் நிகழ இருக்கிறது.
நீ தயாராகி விடு. நெற்றியில் திலகம் இட்டுக் கொள். நல்ல பட்டாடை உடுத்திக் கொள். வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள் . நான் தயாரானதும் உன்னைக் கூப்பிடுகிறேன்.”
வசிஷ்டர் தன்னுடைய சிஷ்யர்கள் புடைசூழ அந்த அரண்மனை வீதியில் நடந்து வந்தார். வீதியின் இரு பக்கங்களிலும் நின்றிருந்த மக்கள் பூக்களைத் தூவி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். ‘குருப்யோ நமஹ! சூரிய குலத்தின் குல குரு வாழ்க! பிரம்மரிஷி வசிஷ்டர் வாழ்க!’ எனப் பலவாறு கோஷங்கள் எழுப்பினார்கள்.
தங்கள் குருவின் மேல் அயோத்தி மக்கள் காட்டும் மரியாதையையும் அன்பினையும் நினைத்து சிஷ்யர்கள் மிகவும் பூரித்துப் போனார்கள். அவர்கள் நடையில் ஒரு துள்ளல் இருந்தது. மிகுந்த பவ்யத்துடன் கைகளை கூப்பிய படி வசிஷ்டர் முன்னே செல்ல பின்னே சென்ற சிஷ்யர்கள் கைகளை உற்சாகத்தில் அசைத்தார்கள்.அயோத்தி அரண்மனையின் வாசலில் வேத கோஷங்கள் முழங்கியபடி வேத விற்பன்னர்கள் பூரண கலசத்துடன் அவர்களை வரவேற்றார்கள். தசரதன் நடு நாயகமாக நின்றிருந்து கைகூப்பி வசிஷ்டரை வணங்கி அரண்மனையின் உள்ளே அழைத்துச் சென்றார். மங்கள வாத்தியங்கள் முழங்கின.
சூரிய மண்டபம் என்று அழைக்கப் படுகின்ற அந்த பெரிய மண்டபத்தில் விழாவிற்கான எல்லா ஏற்பாடுகளையும் அமைச்சர் சுமந்திரன் மிகவும் நேர்த்தியாக செய்திருந்தார். சந்தன மரத்தினால் வேலைப்பாடுகள் அமைந்த நான்கு தொட்டில்கள் அருகருகே தயாராக இருந்தது. ஒவ்வொரு தொட்டிலும் வண்ண மலர்களாலும் பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அந்த அரங்கம் முழுவதுமே நறுமணம் சூழ்ந்திருந்தது. மங்கள வாத்தியங்கள் இசைத்தபடி விற்பன்னர்கள் இருந்தார்கள். மற்றைய நாட்டு அரசர்கள், சிற்றரசர்கள் மற்றும் அரசவையைச் சார்ந்த முக்கியமான அங்கத்தினர்கள் ஒருபுறம் வீற்றிருந்தார்கள். மற்றொருபுறம் மூன்று பட்டத்து ராணிகளின் தாய், தந்தை மற்றும் உறவினர்களும் வீற்றிருந்தார்கள். இன்னொரு புறம் சிறப்பு அழைப்பாளர்களாக வந்த இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் மற்றும் ஏனைய கலைஞர்களும் வீற்றிருந்தார்கள். அதற்கு அடுத்தபடியாக முக்கியமான போர்த் தளபதிகளும் சிறப்பு அதிகாரிகளும் அமர்ந்திருந்தார்கள்.
மூன்று பட்டத்து ராணிகளும் நான்கு புதல்வர்களுடன் பணிப்பெண்கள் புடைசூழ அந்த அரங்கினுள் நுழைந்தார்கள். ‘தசரதர் வாழ்க! சூரியகுலம் தழைக்க!’ வாழ்த்து சொல்லி முழங்கினார்கள். பூக்களைத் தூவி அவர்களை வரவேற்றார்கள். ஒவ்வொருவரும் குழந்தையைத் தொட்டிலில் இட்டபோது குலவை இசைத்தார்கள்.அந்த இடமே மிகவும் மகிழ்வாக காணப்பட்டது. தசரதர், வசிஷ்டரை நோக்கி, “தாங்கள் குழந்தைகளுக்கு நாமகரணம் செய்விக்க வேண்டும்” என்று வேண்டினார்.
சுமித்திரை தான் ஈன்றெடுத்த இரு குழந்தைகளில் ஒன்றை எடுத்து தன் மார்போடு அணைத்திருந்தாள். தசரதன் அருகில் சென்று அவளை ஒரு கையால் அணைத்தபடி குழந்தையின் வலது காதில் “சத்ருக்ணன்! சத்ருக்ணன்! சத்ருக்ணன்!” என்று மூன்று முறை உச்சரித்தார். உச்சி முகர்ந்தார். தம்பதியர் இருவரும் வசிஷ்டரையும் கூட்டத்தினரையும் ஒருங்கே பார்த்து வணங்கும் விதமாக கைகூப்பினார்கள்.வசிஷ்டர், ‘‘இந்தப் பெயரின் அர்த்தம், சத்துருக்களை வெல்பவன் அதாவது உள்ளே ஏற்படக்கூடிய எதிரிகளையும் வெளி உலகில் ஏற்படக்கூடிய எதிரிகளையும் வெல்லும் திறன் பெற்றவன் என்பதுதான்.” என்றார்.
கூடியிருந்தோர் அனைவரும் தங்கள் கரவொலி மூலம் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.சுமித்திரை தான் ஈன்றெடுத்த இரு குழந்தைகளில் மற்றொன்றை எடுத்து தன் மார்போடு அணைத்திருந்தாள். தசரதன் அருகில் சென்று அவளை ஒரு கையால் அணைத்தபடி குழந்தையின் வலது காதில் “இலக்குவன்! இலக்குவன்,! இலக்குவன்!” – என்று மூன்று முறை உச்சரித்தார். உச்சி முகர்ந்தார்.
தம்பதியர் இருவரும் வசிஷ்டரையும் கூட்டத்தினரையும் ஒருங்கே பார்த்து வணங்கும் விதமாக கைகூப்பினார்கள்.
வசிஷ்டர், ‘‘இலக்குவன் என்ற பெயரின் அர்த்தம் எல்லா லட்சணங்களும் பொருந்தியவன்.நிறைவாக கைங்கரியங்களை செய்பவன்.” என்றார் .கூடியிருந்தோர் அனைவரும் தங்கள் கரவொலி மூலம் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.அடுத்து தசரதர் தனது மிகவும் பிரியத்திற்கு உரிய கைகேயியிடம் சென்றார். தசரதர் அருகில் சென்று அவளை ஒரு கையால் அணைத்தபடி குழந்தையின் வலது காதில் “பரதன்! பரதன்! பரதன்!” என்று மூன்று முறை உச்சரித்தார். உச்சி முகர்ந்தார். கைகேயியின் நெற்றியில் முத்தமிட்டார் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தார்.தம்பதியர் இருவரும் வசிஷ்டரையும் கூட்டத்தினரையும் ஒருங்கே பார்த்து வணங்கும் விதமாக கைகூப்பினார்கள்.
வசிஷ்டர், ‘‘பரதன் என்றால் பாரத்தைச் சுமப்பவன் என்று பொருள். எல்லா பாரத்தையும் சுமக்கக் கூடியவன். பழிச்சொல்லால் வரக்கூடிய பாரத்தைக் கூட!’’ என்றார்.
கூடியிருந்தோர் அனைவரும் தங்கள் கரவொலி மூலம் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். அடுத்து, தசரதர் கௌசல்யையிடம் சென்றார். தசரதர் அருகில் சென்று அவளை ஒரு கையால் அணைத்தபடி குழந்தையின் வலது காதில் “ராமன்! ராமன்! ராமன்!”- என்று மூன்று முறை உச்சரித்தார். தசரதர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது மீண்டும் மீண்டும் உச்சி முகர்ந்தார். குழந்தையின் பாதங்களை தடவினார். தன் தலையில் வைத்துக் கொண்டார். கௌசல்யையை நன்றியுடன் பார்த்தார். நெற்றியில் முத்தமிட்டார்.
தம்பதியர் இருவரும் வசிஷ்டரையும் கூட்டத்தினரையும் ஒருங்கே பார்த்து வணங்கும் விதமாக கைகூப்பினார்கள்.வசிஷ்டர், ‘‘ராமன் என்றால் மனதிற்கினியவன் என்று பொருள்’’ என்றார்.
கூடியிருந்தோர் அனைவரும் தங்கள் கரவொலி மூலம் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.வசிஷ்டர் ஒவ்வொரு குழந்தையின் தொட்டிலின் அருகில் சென்று கைகூப்பி பிரார்த்தனை செய்தார். முதல் தொட்டிலில் இருந்த ராமனை உற்று நோக்கினார். அந்த குழந்தையின் இரு கால்களையும் தடவிக் கொடுத்து தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.
அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர். ‘உனக்கு ராமன் என்று பெயர் சூட்டும் பாக்கியத்தை எனக்கு அளித்தாயே! ராமா! என்னே உன் பெரும் கருணை! தன்யனானேன்’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார். அவருக்கு எல்லாமும் ஞானதிருஷ்டியில் தெரிந்து இருந்தது. மீண்டும் பிரார்த்தனை செய்தார்.பணிப்பெண்கள் மங்கள ஆரத்தி எடுத்தார்கள். ஆரத்தி பொட்டை எல்லா குழந்தைகளுக்கும் மற்றும் பட்டத்து ராணிகளுக்கும் நெற்றியில் திலகமாக இட்டார்கள்.
நாமகரணம் சூட்டப்பட்ட அந்த நாளில் மாலைப்பொழுதில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடந்த வண்ணம் இருந்தன. வசிஷ்டர் தன்னுடைய மாணவர்கள் எல்லோரையும் அழைத்து ‘‘நீங்கள் கலை நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வில்லையா?” என்று கேட்டார். ‘‘குருவே இன்று எங்களுக்கு நீங்கள் ஒரு வெகுமதியைத் தந்தருள வேண்டும்.” “என்ன? வெகுமதியா? கேட்டுத் தருவது என்ன வெகுமதியா! அதுவும் அதைத் தர நான் என்ன பேரரசரா?”‘‘நீங்கள் மட்டுமே அருளக்கூடியது. உங்களால் மட்டுமே அருளக்கூடியது.”
‘‘சரி! அளித்தேன். பீடிகை அதிகம் போடாமல் உடனே கேளுங்கள்!”‘‘குருநாதா! உங்களிடம் எங்களுக்கு மனம் திறந்து சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. நீங்கள் அதற்குப் பதில் அளித்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் அமையும் என நம்புகிறோம். ஒரு உரையாடலாக இதை நிகழ்த்த நீங்கள் அனுமதிக்க வேண்டும். குருநாதா!”
(தொடரும்)
கோதண்டராமன்
The post மனதிற்கினியான் appeared first on Dinakaran.