×

கொத்தக்குப்பத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொத்தக்குப்பத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. விஜயலு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 100 சவரன் நகைகள் மற்றும் ரூ.70,000 ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது. கண்டிகையில் உள்ள உறவினரின் துக்க நிகழ்வுக்கு குடும்பத்துடன் விஜயலு சென்றிருந்தபோது கொள்ளையர்கள் கைவரிசை. ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடித்தவர்களுக்கு பொதட்டூர்பேட்டை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதி கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலு. இவருக்கு திருமணமாகி மகன், மகள் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது 50 ஏக்கரில் வாழை மற்றும் கரும்பு பயிர் செய்து விவசாயம் செய்து வருகிறார். உறவினர் துக்க நிகழ்வுக்காக விஜயலு தனது குடும்பத்துடன் திருத்தணி அருகில் உள்ள கே.ஜி. கண்டிகைக்கு சென்றார். பின்னர், இவர்கள் நேற்றிரவு வீட்டிற்கு திரும்பிய நிலையில் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வீட்டில் சோதனை செய்து பார்த்தில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 100 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 70 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்து தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டின் பின்புறம் உள்ள வாழைத்தோட்டம் வழியாக வந்த கொள்ளையர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும், இதுகுறித்த விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

 

The post கொத்தக்குப்பத்தில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை! appeared first on Dinakaran.

Tags : THIRUVALLUR ,SHAWARAN ,JEWEL ,THIRUVALLUR DISTRICT ,Vijayalu ,Kandica ,
× RELATED நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்...