பிரதமர் மோடியை இன்று காலை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். பள்ளிக் கல்வி மற்றும் 2ம் கட்ட சென்னை மெட்ரோவுக்கான நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும், மீனவர்கள் கைது விவகாரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதலமைச்சர் வலியுறுத்த உள்ளார். சென்னையில் இருந்து நேற்று மாலை 5.30 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அங்கு திமுக எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டி ஆர் பாலு, கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், திருச்சி சிவா, தயாநிதிமாறன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்றார். தொடர்ந்து பிரதமர் மோடியை இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதலமைச்சர் பிரதமரிடம் அளிக்க உள்ளார். குறிப்பாக அதில் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டப்பணிகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த உள்ளார். மேலும் சமக்ர சிக்‌ஷா அபியான் என்னும் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 573 கோடியை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுக்கிறார்.

தமிழ்நாட்டிற்கான வரி நிலுவைகள், வெள்ள பாதிப்புகளுக்கான நிவார நிதிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று இந்த பயணத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவு 8 மணிக்கு சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post பிரதமர் மோடியை இன்று காலை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: