×

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் 1.50 லட்சம் பொதுமக்கள் பயன்: பயனாளிகளின் மனம் நிறைந்தது

அரியலூர், செப். 27: அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி, மின்நகரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி நேரில் சந்தித்து திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட சீர்மிகு திட்டம், கடைக்கோடி மக்களின் கதவுகளையும் தட்டிய உன்னதமான திட்டமான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மக்களைத் தேடி மருத்துவம் நான்காவது ஆண்டாக அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயனடைந்த அரியலூர் மின்நகரில் வசிக்கும் பயனாளிகளை மாவட்ட கலெக்டர் நேற்று நேரில் சந்தித்து திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது கந்தன் என்ற பயனாளி தான் பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளதாகவும், தனக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் (Stroke) ஏற்பட்டதாகவும், அதற்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக பிசியோதரபி சிகிச்சை முறையாக வழங்கப்பட்டு தற்பொழுது குணமடைந்து உள்ளதாகவும், மருந்து மாத்திரைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் இத்திட்டம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், அவருடைய மகன் தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதம் (Stroke) ஏற்பட்டதாகவும், அவருக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து வீடு தேடி வந்து வழங்கப்படுவதாகவும் இத்திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் குணவதி என்பவர் தெரிவிக்கையில், எனக்கு ஆஸ்துமா, சர்க்கரை நோய் உள்ளது. எனக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. எங்கள் வீடு தேடி வந்து மருத்துவ உதவிகளை வழங்குகின்றனர். நானும், எனது கணவர் மற்றும் மகனும் இத்திட்டத்தின் மூலம் தான் சிகிச்சை பெற்று வருகிறோம். இத்திட்டதினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என குணவதி தெரிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 1,50,189 பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.

அதன்படி உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட 69,150 நபர்களும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 46,026 நபர்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 31,070 நபர்களும், பிசியோதெரபி சிகிச்சை 20,821 நபர்களும், வலி தணிப்பு சிகிச்சை 3,592 நபர்களும் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 728 நபர்களும் தொடர்ந்து சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அஜிதா, மருத்துவர் காயத்ரி, வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகா, மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் 1.50 லட்சம் பொதுமக்கள் பயன்: பயனாளிகளின் மனம் நிறைந்தது appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,Ariyalur Municipality ,Minnagar ,District ,Collector ,Rathnaswamy ,Chief Minister of Tamil Nadu ,
× RELATED டிசம்பர் 20 தேதி நடக்கிறது எரிவாயு...