அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு சட்டரீதியாக எதிர்கொண்டு மீண்டு வருவேன்: சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கை சட்ட ரீதியாக எதிர் கொண்டு, வழக்கில் இருந்து மீண்டு வருவேன் என்று செந்தில் பாலாஜி கூறினார். சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில், தமிழக அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை, அமலாக்கத் துறையினர் கைது செய்து சிறையி அடைத்தனர் .

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் அடிப்படையில் புழல் சிறையில் இருந்து நேற்று மாலை 7 மணியளவில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுதர்சனம் எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏக்கள் அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், தாயகம் கவி, மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன், சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் பேண்ட் வாத்தியங்கள், மயிலாட்டங்களுடன், அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செந்தில்பாலாஜி சிறையிலிருந்து வெளியே வரும் சூழ்நிலையில், உதவி கமிஷனர்கள் சகாதேவன், பாண்டியராஜன் ஆகியோர் மேற்பார்வையில், புழல் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால், சிறைச்சாலை அருகிலுள்ள சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த கழகத்தின் தலைவர், முதல்வருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன்.

கழகத்தின் இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்மீது தொடரப்பட்ட வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய்வழக்கு ஆகும். இந்த பொய் வழக்கை சட்ட ரீதியாக நீதிமன்றத்தை எதிர் கொண்டு வழக்கில் இருந்து மீண்டு வருவேன். புழல் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மெரினாவில் உள்ள தலைவர்கள் அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

* என் மீது அன்பும்,
நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த கழகத்தின் தலைவர், முதல்வருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன்.

The post அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு சட்டரீதியாக எதிர்கொண்டு மீண்டு வருவேன்: சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: