வத்திராயிருப்பு, செப்.27: வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேதமடைந்த கட்டிடங்களை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ ராமசாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்பிக்கள் லிங்கம், அழகிரிசாமி, முன்னாள் எம்எல்ஏ பொன்னுபாண்டியன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும். மகப்பேறு, பொது சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளுக்கு தனித்தனி வார்டுகள் கட்ட வேண்டும்.
மருத்துவமனையில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும் புதர்களை அப்புறப்படுத்தி வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன், துணைச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.