ஈரோடு,செப்.27: ஈரோடு மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எம்மாம்பூண்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17.39 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.39.96 லட்சம் மதிப்பீட்டில் எம்மாம்பூண்டி மயானம் முதல் ஊராட்சி எல்லை வரை சாலை அமைக்கப்பட்டு வருவதையும்,வேமாண்டம்பாளையம் ஊராட்சி சரவணகுட்டை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்து வாய்க்கால் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதே போல காந்திநகர் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 6 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,தொடர்ந்து வேமாண்டம்பாளையம், பழையூர் பகுதியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கரட்டுப்பாளையம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு விடுதி மற்றும் ஜிம்னாஸ்டிக் அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், ஜெ.ஜெ நகரில் நபார்டு திட்டத்தின் கீழ், அளுக்குழி முதல் ஜெ.ஜெ நகர் வரை ரூ.224.18 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பாலம் கட்டும் பணி என மொத்தம் ரூ.4. 8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்ததோடு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு உரிய காலத்திற்குள் கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.
The post நம்பியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.4.8 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் appeared first on Dinakaran.