ரூ10 கோடி நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த விவகாரம்: பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் மீது குவியும் புகார்கள்

* 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு
* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பதிவுசெய்த வழக்கும் பாய்கிறது

சென்னை: ஆள்மாறாட்டம் மூலம் ரூ10 கோடி நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்தை நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 8ம் தேதி வரை சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்தனர். இவர் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து பாதிக்கப்பட்டோர் புகார் அளித்து வருவதால், 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். தென் சென்னையில் பதிவுத்துறை அதிகாரியாக ரவீந்திரநாத் பணியாற்றிய போது, தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் சையது அமான் என்பவருக்கு சொந்தமாக ரூ10 கோடி மதிப்புள்ள 85 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவரது தந்தை 1980ம் அண்டு சையது அமானுக்கு எழுதிக் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை இசி செய்து பார்த்த போது, அவரது தந்தை காந்தம்மாள் என்பவருக்கு விற்பனை செய்ததுபோல் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் சையது அமான் 1980ம் ஆண்டே அவரது தந்தை எழுதி கொடுத்த நிலையில், 1987ம் ஆண்டு எப்படி காந்தம்மாளுக்கு விற்பனை செய்ய முடியும் என்று சந்தேகம் வந்தது. நிலத்திற்கான ஒரிஜினல் பத்திரங்கள் சையது அமானிடம் இருந்ததால், போலி பத்திரங்கள் மூலம் காந்தம்மாளுக்கு பத்திரப்பதிவு செய்த ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதேநேரம் சையது அமான் ஆள்மாறாட்டம் மோசடி குறித்து கடந்த 2011ம் ஆண்டு உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மோசடி தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தென் சென்னையில் பதிவுத்துறை அதிகாரியாக இருந்த ரவீந்திரநாத், மோசடி நபர்களுக்கு ஆதரவாக 8 முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றியது தெரியவந்து. மேலும், இந்த மோசடிக்கு உடைந்தையாக பதிவுத்துறை உதவியாளர்கள் லதா, சபரீஸ், கணபதி, சார் பதிவாளர் மணி மொழியன் ஆகியோர் இருந்ததும் விசாரணையின் மூலம் உறுதியானது. அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தற்போது சேலத்தில் பதிவுத்துறை டிஐஜியாக உள்ள ரவீந்திரநாத் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது. மோசடிக்கு உடந்தையாக இருந்த பதிவுத்துறை உதவியாளர்கள் லதா, சபரீஸ், கணபதி மற்றும் சார் பதிவாளர் மணி மொழியன் ஆகியோரையும் அதிரடியாக கைது செய்தது. ஆனால் பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்படாமல் இருந்தார்.

இதற்கிடையே கைது ெசய்யப்பட்ட பதிவுத்துறை உதவியாளர்கள் மற்றும் சார் பதிவாளர் மணி மொழியன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கூறியதாலேயே இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகவும், இதற்காக அவர் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்று கொண்டு மோசடி நபர்களுக்கு ஆதரவாக பத்திரப் பதிவு ெசய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து சிபிசிஐடி எஸ்பி வினோத் சாந்தாராம், டிஎஸ்பி புருஷோத்தமன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் சேலம் சென்று பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்தை அதிரடியாக கைது செய்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து நேற்று முன்தினம் தீவிரமாக விசாரித்தனர். அதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, வரும் 8ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் போலி பத்திர பதிவு செய்த வழக்கில் ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளதால், லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் இவ்வழக்கை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் டிஐஜி ரவீந்திரநாத் மீது சிபிசிஐடி அலுவலகத்தில் புகார்கள் குவிந்து வருவதால், அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட டிஐஜி ரவீந்திரநாத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்தினால்தான், அதன் பின்னணியில் அரசியல் பிரமுர்கள் மற்றும் மோசடிக்கு உடைந்தையாக இருந்த பதிவுத்துறை அதிகாரிகள் குறித்த தகவல்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட புகார்…
பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அவர் மீது புகார்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கரணையில் பல கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான சதுப்பு நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அப்போதே அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத், அதிமுக அமைச்சர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததால், லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது நடவடிக்கை எடுக்காமல் புகாரை கிடப்பில் போட்டதாக கூறப்பட்டது.

The post ரூ10 கோடி நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்த விவகாரம்: பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் மீது குவியும் புகார்கள் appeared first on Dinakaran.

Related Stories: