என்.என்.கண்டிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஊராட்சிமன்ற கட்டிடப் பணிக்கு தடை

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் என்.என்.கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தொடர்பாக உதவி திட்ட அலுவலர் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு கட்டிடப் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், என்.என்.கண்டிகை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பலவீனமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அங்குள்ள ஊராட்சி சேவை மையத்தில் 4 ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

அடிப்படை வசதிகள் இல்லாத ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் 41 மாணவ, மாணவிகளும், அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகளும் அடைக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தனர். அதே நேரத்தில் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்பட்டு, புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு பயன்படுத்தாமல் வீணாகி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடித்து அகற்றப்பட்டது. அந்த இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்ட ஊராட்சி மன்றம் சார்பில் அடிக்கல் நாட்டி குழி பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. குறுகிய இடத்தில் ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் கட்டினால் மாணவர்களின் கல்வி திறன் மேலும் பாதிக்கப்படுவது குறித்து கலெக்டரிடம் பொதுமக்கள் கொடுத்த புகார் தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது.

தினகரன் செய்தி எதிரொலியாக கலெக்டர் த.பிரபு சங்கர் உத்தரவின் பேரில் மாவட்ட ஊராட்சி முகமை உதவித்திட்ட அலுவலர் மணிவாசகம் தலைமையில் என்.என்.கண்டிகை அரசுப்பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், உடனடியாக ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிகளுக்கு தடை விதித்தனர். மாற்று இடத்தை தேர்வு செய்து ஊராட்சி மன்ற கட்டிடப் பணிகளை தொடங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு உதவித்திட்ட அலுவலர் உத்தரவிட்டார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

* இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்
என்.என்.கண்டிகை அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை காரணம் காட்டி 4 ஆண்டுகளாக பள்ளி மூடப்பட்டு குறுகிய இடத்தில் வகுப்பு நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தில் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், பள்ளியில் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் திருவாலங்காடு வட்டார கல்வி அலுவலர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் தெரிவித்தனர்.

The post என்.என்.கண்டிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஊராட்சிமன்ற கட்டிடப் பணிக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: