×

பாலாற்றில் தடுப்பணை கட்டும் அண்ணாவின் கனவு திட்டத்தை விரைந்து முடிப்பாரா முதல்வர்? விவசாயிகள் எதிர்பார்ப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வெங்கடாபுரம் பகுதியில் தடுப்பணை அமைப்பதற்கான கோப்புகள் அனுப்பப்பட்டு, இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யாமல் திட்டம் முடங்கியுள்ளதால், அண்ணாவின் கனவுத் திட்டத்தை விரைந்து முடிக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என விவசாயிகள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். பால் போன்ற நீரை வழங்கும் பாலாறு கர்நாடக மாநிலம், கோலார் நந்தி துர்கம் மலை பகுதியில் உற்பத்தியாகி, கர்நாடகத்தில் 93 கிமீ ஆந்திராவில் இருந்து 33 கிமீ பாய்ந்து தமிழ்நாட்டில் வேலூர், வாணியம்பாடி புள்ளலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக சுமார் 222 கிமீ கடந்து செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வயலூர் பகுதியில் சென்று கடலில் கலக்கிறது.

தஞ்சை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக காஞ்சிபுரம் மாவட்டம், இப்போது காய்ந்துபோன மாவட்டமாக மாறி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெசவு தொழிலும், விவசாயமும் முக்கியமான தொழில்களாக உள்ளன. ஜரிகை மற்றும் மூலப்பொருட்கள் விலையேற்றத்தின் காரணமாக நெசவுத்தொழில் நலிந்து வருகிறது. தற்போது, போதிய தண்ணீர் வசதி இல்லாததாலும், ஏரிகள் ஆக்கிமிரப்பாலும் விவசாய தொழில் செய்ய முடியாதநிலையில் விவசாய நிலங்கள் எல்லாம் தரிசு, வீட்டு மனைகளாகவும் மாறி வருகின்றன. பாலாற்றில் அளவுக்கு அதிகமான மணல் கொள்ளை அடிக்கப்பட்டதால் நிலத்தடிநீர் அதால பாதாளத்துக்கு சென்றுவிட்டது.

அந்த வகையில், பாலாற்றை நம்பியே கரையோர கிராமங்கள் பெரும்பாக்கம், விப்பேடு, ஒரிக்கை, ஐயம்பேட்டை, வாலாஜாபாத், பழவேரி, நெய்யாடுபாக்கம், பாலூர், வில்லியம்பாக்கம், காவாந்தண்டலம், மாகறல் உள்பட 532 கிராமங்களில் 1.24 லட்சம் ஏக்கருக்கு மேலாக விவசாய நிலங்கள் பாலாற்றில் தண்ணீர் இருந்தபோது, 3 போகம் விவசாயம் செய்தனர். ஆனால், தற்போது பாலாறு வற்றி பாலைவனம்போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், பருவமழை காலங்களில் பாலாற்றில் ஓடும் நீர் வீணாக கடலில் கலப்பதால், இதில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வந்தது.

கடந்த 2017ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 இடங்களில் தடுப்பணை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வாயலூர், ஈசூர் – வள்ளிபுரம் ஆகிய இடங்களில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழையசீவரம் பகுதியில் மட்டும் ஒரு தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, காஞ்சிபுரம் அருகே வெங்கடாபுரம் மற்றும் வெண்குடி பகுதிகளில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தினர் கூறுகையில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெண்குடி, வெங்கட்டாவரம் ஆகிய இடங்களில் தடுப்பணை அமைப்பதற்கான கோப்புகள் அனுப்பப்பட்டு, நிதி ஒதுக்காததால் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த, பகுதியில் தடுப்பணைகள் அமைந்தால் அது விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிநீர் உள்ளிட்டவற்கும், நிலத்தடி நீராதாரம் பெருகுவதற்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும். ஆற்றில் அதிகளவு மணல் அள்ளப்பட்டுள்ளதால் ஆற்றின் ஆழம் அதிகரித்துள்ளது. எனவே, கடல் மட்ட அளவீடுகளை கருத்தில் கொண்டு ஆற்றிலிருந்து சுற்றுவட்டார ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை கவனத்தில் கொண்டும் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பிறந்த ஊரில், அண்ணாவின் கனவு திட்டமான தடுப்பணை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடரை சமாளிக்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்த வெங்கடாபுரத்தில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் அறிவிப்பை நாளை நடைபெறவுள்ள பவளவிழா பொதுக்கூட்டத்தில் முதல்வர் வெளியிடுவாரா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

* பாலாற்றில் தடுப்பணைகள்:
மாநிலம் பாலாறு பாயும் தூரம் தடுப்பணை எண்ணிக்கைகர்நாடகத்தில் 93 கிமீ தூரமும், 3 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பாலாறு மூலம் 14 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கின்றது. அதேபோல், ஆந்திர மாநிலத்தில் 33 கிமீ., தூரமும், 22 தடுப்பணைகளும் உள்ளன. ஆனால், 222 கிமீ., தூரம் பாயும் தமிழ்நாட்டில் 5 அணைகள் மட்டுமே உள்ளன. எனவே, மற்ற மாநிலங்களை விட கூடுதாலாக தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பாலாற்றில் தடுப்பணை கட்டும் அண்ணாவின் கனவு திட்டத்தை விரைந்து முடிப்பாரா முதல்வர்? விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Anna ,Bala ,Kanchipuram ,Venkatapuram ,Dinakaran ,
× RELATED தலைசிறந்த தமிழ்நாடாக நாம்...