×
Saravana Stores

அரியலூரில் 28ம் தேதி வேளாண் இயந்திரங்கள் விழிப்புணர்வு முகாம்

அரியலூர், செப். 26: அரியலூரில் 28ம் தேதி வேளாண் இயந்திரங்கள் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெற அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு வழிமுறைகளை விவசாயிகள் அறிந்து கொள்வதற்காக அரியலூர் மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையும், தனியார் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விற்பனை நிறுவனங்களும் இணைந்து வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி அன்று காலை 10 மணியளவில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரியலூர் வளாகத்தில் வைத்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது.

முகாமில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை இயக்குதல், பராமரித்தல், செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத பணிகள், பழுதுகளைக் கண்டறிதல், உதிரிப் பாகங்கள் குறித்த தெளிவுரை, மசகு எண்ணெய் மற்றும் உயவுப் பொருட்கள் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு தெளிவுரை வேளாண் பொறியாளர்களாலும் தனியார் இயந்திர நிறுவனங்களாலும் வழங்கப்படுகிறது. வேளாண்மைப் பொறியியல் துறைக்கு சொந்தமான வேளாண் இயந்திரங்களான பல்வகைக் கதிரடிக்கும் இயந்திரம், உளிக்கலப்பை, வைக்கோல் கூட்டும் கருவி, நிலம் சமன்படுத்தும் லேசர் லெவலர், நில நீர் ஆய்வு செய்யும் கருவி போன்ற பல்வகையான இயந்திரங்கள் மற்றும் கருவிகள் குறித்த செயல் விளக்கங்களும் அளிக்கப்படுகிறது. மாவட்ட விவசாயிகள் அனைவரும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post அரியலூரில் 28ம் தேதி வேளாண் இயந்திரங்கள் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,District ,Collector ,Rathnaswamy ,Ariyalur district ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர...