உறவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தலைமுறை குழந்தை பெற்றுக்கொள்வதை சுமையாக கருதும் பெண்கள்: பிரபல பாடகி ஆஷா போஸ்லே பேட்டி

மும்பை: குழந்தை பெற்றுக்கொள்வதை பெண்கள் சுமையாக கருதுகின்றனர் என்று பிரபல பாடகி ஆஷா போஸ்லே பேட்டியளித்துள்ளார். பிரபல இந்தி திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே மற்றும் ஆன்மீக குரு ரவிசங்கர் இடையிலான உரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஆஷா போஸ்லே கூறுகையில், ‘எனக்கும் எனது கணவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. நான் கோபித்துக் கொண்டு எனது குழந்தைகளுடன் எனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவேன். ஆனால் நான் எனது கணவரை விவாகரத்து செய்யவில்லை. ஆனால் இப்போதெல்லாம், தம்பதிகள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவது அதிகரித்துவிட்டது.

ஏன் இப்படி நடக்கிறது? என் வாழ்நாளின் பெரும்பகுதியை திரைத்துறையில் கழித்திருக்கிறேன். பலரைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இன்றைய தலைமுறையினர் செய்வது போல் இதற்கு முன்பு யாரும் செய்ததில்லை. இன்றைய தம்பதியினர் இடையிலான காதல், மிக விரைவில் சலித்து போய்விடுகிறது என்று நினைக்கிறேன். விவாகரத்துக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். மேலும் தற்போது பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒரு சுமையாக கருதுகின்றனர். எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவர்களை வளர்த்து, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து தற்போது பேரக்குழந்தைகளுடன் உள்ளேன்.

கணவர் துணை இல்லாமல் தனியாகவே எனது அனைத்து கடமைகளையும் நிறைவேற்றினேன்’ என்றார். முன்னதாக தனது 16வது வயதில், தனது மூத்த சகோதரியின் செயலாளரான 31 வயதான கணபத்ராவ் போஸ்லேவை ஆஷா போஸ்லே திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தாரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடந்தது. தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். ஆனால் தம்பதிகள் 1960ல் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post உறவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தலைமுறை குழந்தை பெற்றுக்கொள்வதை சுமையாக கருதும் பெண்கள்: பிரபல பாடகி ஆஷா போஸ்லே பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: