×

கிரகங்களும் பெயர்களும்…

ஒரு நபரை, ஒரு ஊரை அல்லது ஒரு விஷயத்தை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவோ அல்லது அந்த குறிப்பிட்ட விஷயத்தை நீங்கள் சுட்டிக் காட்டவோ கண்டிப்பாக பெயர்கள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. பெயர் என்ன செய்யும் என்று நீங்கள் நினைக்கலாம்? பெயர்கள் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அதாவது, பெரிய வெற்றியையோ அல்லது பெரிய தோல்வியையோ ஏற்படுத்தும் என்பது உண்மை. ஒவ்வொரு குழந்தைக்கும் தங்கள் பெற்றோர்கள், தாங்களே பெயர் சூட்டுகிறோம் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அப்படியில்லை. குழந்தையின் பிறந்த ஜாதகமும், அதில் உள்ள வலிமையான கிரகங்களுமே முடிவு செய்கிறது என்றால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை.சிலருடைய பெற்றோர், குழந்தைக்கு தாத்தாவின் பெயரையோ, கொள்ளு தாத்தாவின் பெயரையோ வைக்க வேண்டும் என உறுதியாக இருப்பர். அப்படியே பெயரும் சூட்டுவர். அதில் உள்ள சூட்சுமம் என்ன வெனில், அந்தக் குழந்தை, அதே சந்ததியில் மறுபிறப்பை கொண்டுள்ளது, என்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஜோதிடத்தின் அடிப்படையில் பெயர்கள் எப்படி பிறக்கின்றன?

ஒருவருடைய பிறப்பு, ஜாதகத்தின் அடிப்படையில் திரிகோணம் என்று சொல்லக்கூடிய ஒன்றாம் (1ம்), ஐந்தாம் (5ம்), ஒன்பதாம் (9ம்) அதிபதிகளே பெயர்களை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. இதில் எந்த பாவத்தின் அதிபதி வலிமையாக இருக்கிறதோ, அந்த கிரகத்தின் பெயர்களே ஒருவருக்கு அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில், இரண்டு, மூன்று கிரகங்கள் இந்த பாவாதிபதிகளுடன் இணைவதால், கிரக இணைவில் பெயர்கள் உருவாகின்றன. சொந்த வீட்டை பார்க்கும் கிரகங்களின் பெயர்களும் இந்த பாவாதிபதிகள்கிரகங்களின் சாரத்தில் அமைந்தபெயர்களும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டு.

பெயர் ஒரு காலத்திற்கு பின் மாற்றமடைவதேன்?

ஒருவர் பிறந்த காலத்தில் ராகு – கேது கிரகங்கள் ஒன்றாம் (1ம்), ஐந்தாம் (5ம்), ஒன்பதாம் (9ம்) பாவாதிபதிகளுடன் இணைந்து இருக்கும் பட்சத்திலும், பின்பு அவர்களுக்கு ஏற்படும் திசா அல்லது புத்திகள் ராகு – கேதுக்களுடன் இணைந்து இருக்கும்போது, ஒரு பெயர் உருவாகும். பின்பு ராகு – கேது திசாக்களுக்கு பிறகு அவர்களுக்கு இந்தப் பெயர் மாற்றங்கள் உண்டாகிறது. இது தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. மேலும், ஒரு ஊரின் பெயர், தெய்வத்தின் பெயர், கோயிலின் பெயர், தெருவின் பெயர், இல்லத்தின் பெயர், வீட்டில் வளர்க்கும் ஜீவராசிகளின் பெயர், வியாபார ஸ்தலங்களின் பெயர் என எல்லாவற்றிலும் இந்த மாற்றம் உண்டாகிக் கொண்டே இருக்கும்.

பெயர் என்ன செய்கின்றன?

ஒரு நிறுவனத்தின் வலிமையான பெயர், அந்த நிறுவனத்தை இயக்குகிறது என்றால், அது மிகையில்லை. அந்த கிரகம் இருக்கும் கிரகங்களில் வலிமையானதாகவும், நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் அது வலிமையாக இருந்தாலும், அந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு முன்மாதிரியாக திகழும் என்பது நிச்சயமான உண்மை. பெயர்கள் சில நேரங்களில், நோய்களையும் தருகின்றன. ஆனால், அந்த நோயை குணப்படுத்துகின்ற அமைப்பும், நோயை வலிமைப்படுத்துகின்ற அமைப்பும், ஜாதகரின் சுய ஜாதக அமைப்பை பொறுத்தேமாறுபடுகின்றன.

குழந்தைகளுக்கோ நிறுவனங்களுக்கோ எப்படி பெயர் அமைக்கலாம்?

பிறந்த குழந்தையின் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் வலிமையான சுபகிரகத்தின் பெயரையே வைக்கலாம். அந்த கிரகம் அந்த குழந்தைக்கு திரிகோண ஸ்தானங்களான ஒன்றாம் (1ம்), ஐந்தாம் (5ம்), ஒன்பதாம் (9ம்) அதிபதியாக இருப்பது சிறப்பு. மேலும், அவ்வாறு இல்லாவிடில், ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களின் பெயர்களை சூட்டலாம். அவ்வாறும் இல்லாவிடில், சொந்த வீட்டை பார்வை செய்யும் கிரகத்தின் பெயரை சூட்டலாம். அந்த கிரகங்கள்தான் அவர்களை வாழ்நாள் முழுவதும் இயக்கிக்கொண்டே இருக்கும். மேலும், ஒரு இக்கட்டான சூழ்நிலையில்காப்பாற்றவும் செய்யும்.

பெயர்களின் அடிப்படையில் எந்த தெய்வத்தை வழிபடுவது சிறப்பு

உங்கள் நாமங்களுக்கு உரிய தேவதையே உங்களுக்கு வழிகாட்டியாகவும், மேன்மை அடையச்செய்வதாகவும் இருக்கும். உங்களுக்கு ரவி, ஆதித்யா, சங்கரன், சிவா, சூர்யா போன்ற பெயர் உண்டெனில், இவையெல்லாம் சூரியனின் மற்றொரு நாமங்கள். இந்த நாமங்களுக்கு அதிதேவதையாக சிவன் உள்ளார். சிவபெருமானை வழிபடுவது சிறந்ததாகும். சிலநேரங்களில், கலப்பு நாமங்கள் உண்டாகும்போது, அந்த குறிப்பிட்ட தேவதையை தேடி வழிபடுவது சிறப்பான பலன்களை வாழ்வில்உண்டாக்கும். உதாரணத்திற்கு: சுப்பிரமணி என்ற பெயர் முருகனை குறிப்பதாக நாம் நினைக்கிறோம். இந்தப் பெயருக்கான கிரகம் செவ்வாயும் + சனி இணைப்பு ஏற்பட்டால்தான் ஏற்படும். அதுவும் குறிப்பாக, யுத்தம் செய்கின்ற முருகனையே இந்தப் பெயர் குறிப்பிடும். இவர்களின் பெயருக்கு எப்பொழுதும் எதையும் போராடிப் பெறுபவர்களாகவே இருக்கிறது.

பெயர்களும் எனர்ஜியும்

ஒவ்வொரு பெயர்களும் ஒவ்வொரு ஆற்றலைக் கொண்டுள்ளது. சூரியன் என்ற பெயர் நிர்வாகத்தின் ஆற்றலைக் கொண்டுள்ளது. சந்திரன் என்ற பெயர் பொருளை ஈட்டும் வழியை கண்டறியும் பெயராகவும் உள்ளது. இவ்வாறு பெயர்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆற்றலைக்கொண்டுள்ளது. எல்லாப் பெயர்களும் கண்டிப்பாக கிரகங்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தே ஆக வேண்டும்.

The post கிரகங்களும் பெயர்களும்… appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஃபுட் போட்டோகிராபிக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கு!