×

நம்பிக்கை என்றொரு மாத்திரை!

நன்றி குங்குமம் தோழி

நம்பிக்கை என்றொரு மாத்திரை!

வைப்ரேஷனில் அலறிய ஃபோனை எடுத்து பெயரைப் பார்த்தவள் முகத்தில் அத்தனை அலட்சியம். முழு ரிங்கும் போய் ஓயும் வரைக்கும் விட்டுவிட்டு அலைபேசியை தேய்த்து உயிர்பிக்க, இது ஏழாவது தவறிய அழைப்பு என்று மினுக்கியது. இதழ்களைப் பிதுக்கி இகழ்வை பதிவு செய்தவள், ஃபோனை கைப்பைக்குள் போட்டுக் கொண்டாள். மனம் முழுக்க ஒருவித இனம் புரியாத நிம்மதி. சரி தவறென்பதைப் பற்றி பிறகு விவாதிக்கலாம். ஆனால் மனிதர்களின் தகுதியும் சூழ்நிலையும் மறந்து பேசப்படும் நியாயங்கள், அவர்களின் எதிர்கால சலுகைகளின் மீது அவர்களே போர்த்திக் கொள்ளும் அநியாயப் போர்வை.

அலையட்டும்… பணமும், மற்றவர்கள் அரவணைப்பும் இல்லாமல் வாழ்வது எல்லாம், அவ்வளவு எளிய காரியமில்லை என்று உணரட்டும். வாய் இருக்கிறது என்பதற்காக எதுவேண்டுமானால் பேசுவதோ. அகிலா நினைத்தவளாய் தன் அலுவலில் மூழ்கிப் போனாள்.‘‘நான் வூடு வரைக்கும் போய் பார்த்துட்டு வந்துடறேன் செல்வி. நீ இங்கேயே இரு…” கண்ணாடிக்கு பின் இருந்த சீப்பை எடுத்து தலையை திருத்திக் கொண்டு, செருப்பை மாட்டிய வள்ளியை கவலையாய் பார்த்தாள் மகள்.

‘‘அம்மா, இன்னைக்கு பீஸ் கட்ட கடைசி நாள்மா. மூணு மணி வரைக்கும்தான் டைம் தந்திருக்காங்க. எல்லா காலேஜ்லயும் கிட்டத்தட்ட அட்மிஷன் முடிஞ்சிடுச்சுமா. இதுவும் போச்சுனா, இந்த வருஷம் படிப்பே போயிடும்மா…” கவலை பாதியும், பதட்டம் பாதியுமாய் பேசிய மகளை ஆறுதலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியில் வந்தாள்.
மணி பதினொன்று.

‘‘ஒன்பது மணிக்கு மேல, ஃபோன் பண்ணிட்டு வா வள்ளி. கண்டிப்பா பணம் தர்றேன். நீ வேற யார்கிட்டேயும் கேட்டு சிரமப்பட வேண்டாம்…” பச்சை வெண்ணெயை விழுங்கியது போல், அத்தனை கொழ கொழப்பாய் அகிலா சொன்ன வார்த்தையில் எங்கேயுமே இடைஞ்சல் இல்லை.‘‘உறுதியா கிடைக்குமா மா.? முப்பதாயிரம் தொகை பெருசு. நீங்க உறுதி சொல்றதால கேட்கறேன். இல்லைனா, இன்னும் நாலு இடத்தில கேட்டு வைப்பேன்…” வள்ளி துளி சந்தேகத்தோடு கேட்டாள்.

‘‘நான்தான் சொல்றேன் இல்ல. என்னை நம்பாமே வேற இடத்துக்கு போவியா என்ன..? ஐயா ஒன்பது மணிக்கு கிளம்பிடுவார். அதுக்கு பிறகு வா. அவர் இருந்தால்
ஆயிரத்தெட்டு ரூல்ஸ் பேசுவார்…” சத்தத்தில் இருந்த உறுதி சித்தத்தில் இல்லை போலும். வாட்டிய வெயிலை பொருட்படுத்தாமல் அந்த வீட்டின் கேட்டின் முன் நிற்க, மனசு துணுக்கென்றது. கேட் திறந்திருக்க, உள்ளே ஆள் இருக்கும் அரவமே இல்லை. இடுப்பில் சொருகி இருந்த செல்லை எடுத்து மறுபடியும் அகிலாவிற்கு அழைக்க, இப்போது ‘தொடர்பு எல்லைக்கு அப்பால்’ என்று கணினி குரல் சொன்னது.

லேசாய் பதட்டம் முதல் முறையாக மனசில் வந்தது. நம்ப வைத்து கழுத்தறுப்பது எல்லாம் என்ன மாதிரியான செயல். ஆனால் இந்த நிமிஷம் கோபப்படுவதை விட வேகப்பட வேண்டும். கையில் இருக்கும் நாலைந்து மணி நேரத்திற்குள் காசு புரட்ட வேண்டும். முடியும்… முடிய வேண்டும். வேகமாய் அங்கிருந்து நகர முற்பட்டவளை வீட்டிற்குள் இருந்து கேட்ட தடால் என்ற சத்தம் கவனத்தை இழுக்க, அத்தனை சிந்தனைகளையும் தள்ளிவிட்டு, உள்ளே ஓடினாள்.

ஜன்னல் வழியே எதுவும் தெரியவில்லை. ஆனால் உள்ளுக்குள் விசித்திரமாய் முணுகல் சத்தம் கேட்டது. முன்பக்க கதவிற்கு சென்ற வள்ளி, எம்பி எம்பி உடல் பலத்தை வைத்து தள்ள, சரியாய் உள் பக்கம் தாளிடப்படாத கதவு ‘மடார்’ என்று வாய் பிளந்து வழி விட்டது. உள்ளே ஓடியவள் கண்ட காட்சியில் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

அகிலாவின் ஒரே மகள் கீர்த்தனா. மின்விசிறியில் தூக்கு மாட்ட முயற்சி செய்து இருக்கிறாள். கழுத்தில் முடுச்சு இறுகும் முன், துப்பட்டா அறுந்து கீழே விழுந்து இருக்கிறாள்.
‘‘ஐயோ கீர்த்தனா…” ஓடிச்சென்று அவள் தலையை மடியில் தாங்கி, கழுத்தை இறுக்கி இருந்த துப்பட்டாவை கழட்டி வீசினாள். சிகப்பாய் பட்டை கோடு இறங்கி இருந்தது.உயரத்தில் இருந்து விழுந்ததில், கட்டில் முனையில் நெற்றி பட்டு ரத்தம் பீறிட்டுக் கொண்டு இருந்தது. கீர்த்தனாவிடம் அசைவே இல்லை.‘‘அகிலா உங்க ஃபோன் வைப்ரேட் ஆயிட்டே இருக்கு பாருங்க…” பக்கத்து கவுண்டரில் இருந்த ஜெயா சொன்னபோது விஷமமாய் சிரித்தாள்.

‘‘என் சர்வென்ட்தான்…” கேலி சிரிப்பின் அளவு கூடியது.‘‘யாரு, டி.வி ஷோல வந்து அவ்வளவு லா பேசினாளே அவளா..? இன்னுமா அவளை வேலைக்கு வச்சிருக்கே.” ஜெயா கேட்டு முடிப்பதற்குள் அவள் கவுண்டருக்கு ஆட்கள் வர கவனம் திருப்பினாள். அகிலாவிற்குத்தான் அந்த நாள் அப்படியே மனசில் ஓடியது.‘வீட்டு எஜமானிகள் Vs வேலை பார்க்கும் பெண்கள் …’ அந்த பிரபல டி.வி.யின் டி.ஆர்.பி.யில் பிய்த்து உதறும் ரியாலிட்டி ஷோ. அகிலாவும் வள்ளியும் எதிர் எதிரில் அமர்ந்து இருந்தார்கள்.

‘‘நாங்களும் மனுசங்கதான் சார். தனித்தட்டு, டம்ளர் ஒதுக்கி வச்சதைக் கூட மறந்துடலாம். ஆனால் ஏதோ அவசரம்னு ஒரு வாய் தண்ணி இவங்க குடிக்கிற
டம்ளர்ல குடிச்சாக் கூட நம்ம கண்ணு முன்னாடியே அந்த டம்ளரை விசிறி எறியறாங்க சார்…”‘‘இவங்க எல்லாம் பெரிய இடத்தில வேலை பார்க்கிறாங்க. அவசரம் ஆத்திரம்னா அங்கே லோன் போடறாங்க. எங்களுக்கு அவசரம்னா இவங்ககிட்டே தானே கேட்போம். இவங்க குடுத்துதான் சார் ஆகணும்…”‘‘ எந்த பதார்த்தத்தையும் புதுசா இருக்கும் போது தரமாட்டாங்க சார். அதுவே கெட்டுப் போனதும் தூக்கி தருவாங்க.”

‘‘நமக்கு இஷ்டமில்லைனாலும், அடுத்த வீட்டு விஷயத்தை தூண்டி துருவிக் கேட்பாங்க. ஆனால் ‘என் வீட்டு விஷயத்தை யார்கிட்டேயும் பேசாதே’னு எங்களையே திருப்பி அடிப்பாங்க.”
எந்த அச்சமும் இல்லாமல் வள்ளி பேசிய பேச்சுக்கு கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது.அகிலாவுக்கு முகத்தில் ஈயாடவில்லை. சமூக வலைத்தளம் முழுக்க அகிலாவை திட்டித் திட்டி வந்து விழுந்த கருத்துக்களால் மன உளைச்சலில் மூழ்கிக் கிடந்தாள். ஆனால் வள்ளியிடம் எந்த மாற்றமும் இல்லை. உள்ளும் புறமும் ஒரே உணர்வாய் இருந்தவளுக்கு கோபமும் இல்லை, விரோதமும் இல்லை. தன்னைப் போன்ற விளிம்புநிலை மக்களின் மன உணர்வுகளை பதிவு செய்த நிம்மதி மட்டும்தான்.

‘‘அது ஷோ… நீ எப்பவும் போல வேலைக்கு வரலாம். உனக்கு தயக்கமெல்லாம் வேண்டாம்” என்றதும் அகிலாதான்.‘‘இந்த நாளுக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன். என் கருணையும், காசும் உனக்கு இனிக்கும். ஆனால் என்னையே ஊர் பார்க்க குறை பேசுவியோ… உன் மகளுக்கு எல்லாம் எதுக்கு படிப்பு..? அதான் நம்ப வச்சு கழுத்தறுத்தேன். மனசிற்குள் கருவியவள், மொபைலை அணைத்து டேபிளில் தூக்கி போட்டாள்.

வேக வேகமாக ஓடி வந்திருந்தாள் செல்வி. கீர்த்தனாவை தூக்கி வந்து சோபாவில் கிடத்தி, கழுத்தை உயர்த்தி தலையணையில் வைத்து மூச்சை சீராக்கி இருந்தாள் வள்ளி.
‘‘அம்மா என்னாச்சு..?”‘‘சொல்றேன்… இந்த லெட்டர்ல என்ன எழுதி இருக்கு.” டீபாயில் மேல் இருந்த கடிதத்தை மகளிடம் தந்தாள். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது. எழுத்துக்களில் சில நொடிகள் பார்வையை ஓடவிட்டவள், பிறகு சொன்னாள்.

‘‘இரண்டு முறை நீட் எழுதியும் தோல்வி அடைஞ்சுட்டதால, மனசு உடைஞ்சு தற்கொலை பண்ணிக்க போறதா எழுதி இருக்காங்க.”செல்வி சொன்னபோது கீர்த்தனாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. முந்தானை எடுத்து வள்ளி அதை ஒற்றி எடுத்தாள். ‘‘கீர்த்தனா பாப்பா, பத்து வருஷமா உங்க வூட்டுல வேலை செய்றேன். நீ உங்க அப்பா, அம்மாக்கு ஒரே பொண்ணு. உன்னை மட்டுமே யோசிச்சு நீ தற்கொலை பண்ணிட்டா, அவங்க என்ன செய்வாங்கன்னு யோசிச்சியா..? எவ்வளவு கற்பனையோட உன்னை உருவாக்கி இருப்பாங்க.

உன்னோட சேர்த்து அவங்களையும் நீ அழிச்சிட்டு போக நினைக்கலாமா?

எந்த படிப்பும் உயர்ந்ததாவும், தாழ்ந்ததாவும் மார்றது அந்த படிப்பை கை கொள்றவங்க நேர்மையில இருக்கு. ஒரு விஷயம் நடக்கிறது எப்படி நம்ம கையில இல்லயோ, நடக்காததற்கும் நாம பொறுப்பு இல்லை.படிப்பு,காதல், கல்யாணம், தோல்வி, ஏமாற்றம்னு ஆயிரம் வலிகள் தற்கொலைக்கு காரணமாக இருந்தாலும், நம்பிக்கைங்கிற ஒரு மாத்திரை போதாதா அதை குணப்படுத்த.? மனசை நம்ம கட்டுப்பாட்டுல வைக்கணும். ஆசைப்பட்டதை அடைய மட்டும் இல்ல இந்த வாழ்க்கை. ஆசைப்படாததை ஆசைப்பட வைக்கிறதும் சேர்ந்ததுதான் இந்த வாழ்க்கை…” தலைவருடிச் சொன்னபோது கீர்த்தனா அழுது கொண்டு இருந்தாலும் முகத்தில் ஒரு தெளிவு மிளிர்ந்தது.

‘‘அம்மா, பீஸ் கட்டப் போகணும்…” செல்வி குரல் சுணுங்கச் சொல்ல, மகள் முகத்தை கண்டிப்புடன் நிமிர்ந்து பார்த்தாள்.‘‘கீர்த்தனாவுக்கு சொன்னதுதான் உனக்கும். இப்போ இருக்கிற சூழ்நிலையில நான் கிளம்பி வர முடியுமா? முதல்ல எது முக்கியமோ அதை செய்யணும்.’’கீர்த்தனாவிடம் அவள் அப்பாவின் எண்ணை வாங்கி செல்வியிடம் தந்து,
தகவலை பயமுறுத்தாமல் சொல்லச் சொன்னாள். அடுத்த பத்தாவது நிமிடம் அவர் அகிலாவின் அலுவலகத்தில் சென்று நிற்க, இருவரும் கதறிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்கள். மகளைப் பார்த்து கூப்பாடு போட்டு அழுத அகிலாவின் பக்கத்தில் சென்று மென்மையாய் பார்த்தாள்…

‘‘நீங்க இப்படி ஆர்ப்பாட்டம் செய்றதாலே தெருவுக்கே இந்த விஷயத்தை உங்க சத்தம் கொண்டு போகும். முதிர்ச்சி இல்லாம அவசரத்துல எடுத்த முடிவு. ஆனால் அதையே உங்க பொண்ணோட பலகீனம்னு நீங்களே ஊருக்கு காட்டிடாதீங்க. டாக்டருக்கு படிக்கணும்னு சொல்லி சொல்லி அதைத் தவிர வேற எதுவுமே நல்ல படிப்பில்லைனு பாப்பா மனசில பதிய வச்சதும் ஒருவகையில உங்க தப்புதான்.இதெல்லாம் நொடி நேர தீர்மானம். அதைத் தாண்டிட்டா போதும்…” என்றவள் மகளின் கைப்பற்றிக் கொண்டு திரும்பி நடக்க, அகிலா ஓடிவந்து கைகளைப் பற்றிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.

‘‘ஏதோ கோபத்துல பணம் தராமல் இழுத்தடிக்க நினைச்சேன்” என்றவள் வார்த்தையின்றி தவித்தபடி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவர, தாயும் மகளும், சுவற்றில் தொங்கிய கடிகாரத்தை பார்த்தனர்.

மணி நாலரை.‘‘நேரம் முடிஞ்சிடுச்சுமா. இப்போ இது தேவைப்படாது. அன்னைக்கு டி.வி ஷோல நடந்ததை நான் எப்பவோ மறந்துட்டேன். ஏன்னா அது என்னோட ஆதங்கம். ஆனால் நீங்க அதை மறக்கவே இல்லை. ஏன்னா, அது உங்களோட அகங்காரம். உலகத்தில் நம்மகிட்டே இருக்கிறதுதான் உயர்ந்ததுங்கிற கர்வம் எல்லோருக்குமே இருக்குமாம். பணம்தான் சக்தி வாய்ந்ததுன்னா, அதை பூட்டி வைக்கிற இரும்புப் பெட்டி அதை விட சக்தி படைச்சதா..? அந்தப் பெட்டியவே கட்டி வைக்கிற பூட்டும், அந்த பூட்டை கட்டுப்படுத்தற சாவியும் ஒண்ணுக்கொண்ணு சளைச்சது இல்லயே..? அடப்போங்கம்மா, ஏதோ உங்ககிட்டே இருக்கிற பணம் உயர்ந்ததுனு நீங்க நினைச்சா, என்கிட்டே இருக்கிற மனிதாபிமானம் எல்லாத்தையும் விட பெரிசு…’’ மகள் கையைப் பற்றிக் கொண்டு கம்பீரமாய் வெளியில் போனாள்.

மறூநாள் கடைத் தெருவுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த அம்மாவின் கழுத்தை கட்டிக்கொண்டு மாறி மாறி முத்தமிட்ட மகளை விசித்திரமாய் பார்த்தாள் வள்ளி.‘‘அம்மா முதல்ல போட்ட காலேஜ்ல இருந்து அட்மிஷன் கார்டு வந்திருக்குமா.ஒரு ஸ்டூடண்ட் வேற கோர்ஸுக்கு மாத்திட்டு போயிட்டதால வெயிட்டிங் லிஸ்டுல முதல்ல இருந்த எனக்கு வாய்ப்பு வந்திருக்கு. இங்கே சீட் இல்லாததாலதான் நான் மற்ற இடங்கள்ல முயற்சி செய்தது…” செல்வி துள்ளிக் கொண்டு இருந்தாள்.வள்ளி முகத்தில் புன்னகை படர்ந்தது. அவள் எடுத்துக் கொண்ட நம்பிக்கை என்ற மாத்திரை, எப்போதும் தோல்வி என்ற நோயை குணப்படுத்தாமல் விட்டதேயில்லை. யாரிடம் கைமாற்றுக் கேட்கலாம் என்று சிந்தித்தபடி வீட்டை விட்டு வெளியில் வந்தாள்.

தொகுப்பு: எஸ்.பர்வின் பானு

The post நம்பிக்கை என்றொரு மாத்திரை! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED குளிர் காலத்தில் தலையில் எண்ணெய் தடவுங்கள்!