விபத்தில் மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம் தச்சு தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை

*அமைச்சர் கீதாஜீவன் கண்ணீர் மல்க அஞ்சலி

தூத்துக்குடி : தூத்துக்குடியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்ட தச்சு தொழிலாளி உடலுக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன்பெரியசாமி, கலெக்டர் இளம்பகவத் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 2வது தெருவை சேர்ந்தவர் சந்தனராஜ் (51). தச்சு தொழிலாளியான இவர், கடந்த 21ம் தேதி புதுக்கோட்டையில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் வந்த போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி ஜெயலட்சுமி மற்றும் குடும்பத்தினர் முன்வந்தனர்.

இதனை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க மருத்துவமனை டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவ கண்காணிப்பாளர் பத்மநாபன், உதவி கண்காணிப்பாளர் குமரன் மற்றும் டாக்டர்கள் ஏற்பாடு செய்தனர்.

நேற்று காலையில் சந்தனராஜின் உடல் உறுப்புகளை பெறுவதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து மருத்துவக் குழுவினர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். தொடர்ந்து உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அவரது இரு கண்களையும் நெல்லை தனியார் கண் மருத்துவமனை குழுவினரும், தோலை மதுரை தனியார் மருத்துவமனை குழுவினரும் பெற்று பாதுகாப்பாக எடுத்து சென்றனர். தூத்துக்குடி போக்குவரத்து போலீசார், உடல் உறுப்புக்களை சிரமமின்றி கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த முதல் உறுப்பு தானம் இது. இதனைத் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்த சந்தனராஜ் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன், டீன் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு உடலுக்கு மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து உடல் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, அமரர் ஊர்தி மூலம் இறுதி சடங்குக்காக கொண்டு செல்லப்பட்டது. அப்போது டாக்டர்கள், நர்சுகள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியர் பள்ளி மாணவிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஊர்வலத்தின் முன்பாக நடந்து சென்று, மலர்களை தூவி தங்களது மரியாதையை செலுத்தினர்.

The post விபத்தில் மூளைச்சாவால் உடல் உறுப்புகள் தானம் தச்சு தொழிலாளி உடலுக்கு அரசு மரியாதை appeared first on Dinakaran.

Related Stories: