உள்ளூரில் கூலி ஆட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் விவசாய பணிகளில் வடமாநில தொழிலாளர்கள்

* 2 மணி நேரத்தில் இரண்டு ஏக்கர் நடவு

* கூலி மிச்சமாவதாக விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சி : உள்ளூரில் கூலி ஆட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 2மணி நேரத்தில் இரண்டு ஏக்கர் நடவு செய்யப்படுகிறது. கூலி மிச்சமாவதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை தேடி வரும் வடமாநிலத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வர ஆரம்பித்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இன்றைய பல்லாயிர கணக்கான வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

அதில் சாலை விரிவாக்க பணிகள்,ஹோட்டல்கள், கட்டுமானப்பணிகள், சாலையோரங்களில் பொருட்கள் விற்பனை செய்வது, என்று தமிழகத்திற்குள் அவர்கள் பரவியிருந்தாலும், ஒன்றிய அரசின் பணிகளிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதனால் தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் ஒருபக்கம் நிராகரிக்கப்படுகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தற்போது விவசாய பணிகளிலும் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இதுகுறித்து திருச்சி வயலூரை சேர்ந்த விவசாயி மணி கூறுகையில், ‘‘சொந்தமாக மொத்தம் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இதுவரை 2 ஏக்கர் மட்டும் ஆந்திரா பொன்னி பயிரை நாற்று நட்டு வைத்துள்ளேன். சமீப காலமாக விவசாய பணிகளுக்கு போதுமான கூலி ஆட்கள் கிடைப்பதில்லை.அதற்கு காரணம் கிராம புறங்களில் உள்ள அந்தந்த ஒன்றிங்களில் 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், விவசாயி பணிகளுக்கு வர வேண்டியவர்கள் அந்த வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். விவசாய கூலி வேலைக்கு யாரும் வருவதில்லை. ஒருவேளை அவர்கள் வந்தாலும் நாள் கூலியாக ₹300 கேட்கிறார்கள். பணிகளும் சரியாக செய்வதில்லை.

காலை 9 மணிக்கு நிலத்தில் இறங்குபவர்கள் 11.30 மணிக்கெல்லாம் நிலத்தில் இருந்து ஏறிவிடுவார்கள். அவர்கள் தற்போது கூலியாக ரூ.200 கேட்கிறார்கள். நாற்று நடுவதற்கும், களை எடுப்பதற்கும், வரப்புகளை சீரமைக்கவும் என்று எந்த விவசாய பணிகளுக்கும் ஆட்களே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.

விவசாய கூலி ஆட்கள் கிடைக்காததால், வடமாநிலத்தில் இருந்து கூலிக்கு ஆட்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ஆந்திரா பொன்னி ரகம் நாற்று போடப்பட்டிருந்தது. அதை பறித்து ஒன்றடை மணி நேரத்தில் 2 ஏக்கரிலும் பயிரை நட்டுவிட்டனர். அவர்கள் குஜராத் விவசாய நிலங்களில் எப்படி அதை நடுவார்களோ அந்த முறைப்படி நாற்றை நட்டு வைத்துள்ளனர்.

இயந்திரத்தில் கூட இப்படி நாற்றை நட்டு வைக்க முடியாது.ஒவ்வொரு பிடியிலும் குறைந்தது 20 முதல் 25 நாற்றுகள் நட்டு வைப்பது தான் வழக்கம். ஆனால் இவர்கள் 10 நாற்றுகள் தான் நட்டு வைக்கிறார்கள். அவர்களுக்கு கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.4500ம், ஒருவேளை சிற்றுண்டியும், அவர்கள் அழைத்து வருவதற்கான வாகனத்திற்கு ரூ.500ம் செலவு செய்தேன். ஆனால் எனக்கு பணி மிகச்சுலமாக நடந்து முடிந்துவிட்டது. நான் எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாக நாற்றை நட்டு வைத்துள்ளனர்.

தற்போது அவர்கள் நங்கவரம் பகுதியில் தான் வசித்து வருகிறார்கள். திருச்சியில் உள்ள பெரும்பாலான பணிகளில் அவர்கள் தான் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

The post உள்ளூரில் கூலி ஆட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் விவசாய பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: