×

மக்களின் வசதிக்காக துணை சுகாதார நிலையங்களில் மாலைநேர மருத்துவர் நியமனம்

விருதுநகர், செப்.25: நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் 9 துணை சுகாதார நிலையங்களில் மாலை நேர மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தொலைதூர கிராம பகுதி மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாலை நேரங்களில் மருத்துவ சேவைகள் வழங்க தேர்வு செய்யப்பட்ட 9 தொலைதூர பகுதி துணை சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

கலெக்டர் கூறுகையில், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் தட்சனேந்தல், ஆனைக்குளம், இருவர்குளம் துணை சுகாதார நிலையங்கள், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் காரநேந்தல், கீழக்குடி, பி.தொட்டியங்குளம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மம்சாபுரம், பனையடி பட்டி, வலையகுளம் ஆகிய 9 துணை சுகாதார நிலையங்களில் துவக்கி வைக்கப்படுகிறது. இந்த சுகாதார நிலையங்களில் வாரத்தில் 3 நாட்கள் வீதம் மாதத்திற்கு 12 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மருத்துவ ஆலோசனை, சிகிச்சை, அவசர சிகிச்சை வழங்கப்படும். மருத்துவர்கள் நோயாளிகளின் சிகிச்சை தொடர மற்றும் சமூக விழிப்புணர்வு செயல்பாடுகளை செய்திட இடை நிலை சுகாதார பணியாளர்கள் உடனிருப்பர்.

மருத்துவ சேவையை மேம்படுத்த, பெரிய மருத்துவமனைகளின் சுமையை குறைக்க, நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிப்பதே நோக்கம். 9 மருத்துவர்கள், 9 இடைநிலை சுகாதார பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளனர்.வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருந்துகள், உபயோக பொருட்களை கொண்டு வந்து மருத்துவர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்கள் பயன்படுத்துவர். அந்தந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

The post மக்களின் வசதிக்காக துணை சுகாதார நிலையங்களில் மாலைநேர மருத்துவர் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Narikudi ,Tiruchuzhi ,Virudhunagar district ,
× RELATED பள்ளி வளாகத்திற்குள் லாரி புகுந்ததால் பரபரப்பு