தேனி மாவட்ட டாம்கோ திட்ட ஆலோசனைக் கூட்டம்: கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

தேனி, செப்.25: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாளாதார மேம்பாட்டுக் கழகமான டாம்கோ திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்ட அரங்கில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகமான டாம்கோ நிறுவன திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு டாம்கோ தலைவர் பெர்ணாண்டஸ் ரத்தினராஜா தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, எம்.எல்.ஏக்கள் பெரியகுளம் சரவணக்குமார், ஆண்டிபட்டி மகாராஜன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் டாம்கோ தலைவர் பெர்ணாண்டஸ் ரத்தினராஜா பேசும்போது, சிறுபான்மையினரின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்திட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கல்விக்கடன், தொழில் கடன் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வாழும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் சமூகங்களை சேர்ந்த மக்களுக்கு டாம்கோ சார்பில் தனிநபர் கடன் திட்டம், விராசாத்-கைவினை கலைஞர் கடன் திட்டம், சுயஉதவிக் குழுக்களுக்கனா சிறுகடன் திட்டம், கல்விக்கடன் போன்ற பல்வேறு கடன் உதவிகள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் மக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதம் குறைவு என்பதால் இதனை சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க தலா ரூ.47 ஆயிரத்து 500 வீதம் 4 பேருக்கு கடனுதவியும், கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் 16 பேருக்கு நல வாரிய அட்டைகளையும், இஸ்லாமிய உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் 4 பேருக்கு நலவாரிய அட்டைகளையும் டாம்கோ தலைவர் பெர்ணாண்டஸ் ரத்தினராஜா வழங்கினார்.

முன்னதாக கூட்டத்தின்போது, தேனி வட்டார கத்தோலிக்க திருச்சபை அதிபர் முத்து, மாவட்ட ஜமாஅத் உலமாக துணைத் தலைவர் ஆலிம்அகமது முஸ்தபா, கம்பம் பள்ளத்தாக்கு பேராயர் ஞானப்பிரகாசம், தேனி மாவட்ட உலமா சபை தலைவர் முகமது சையது இஸ்மாயில், தேனிமாவட்ட போதகர்கள் ஐக்கிய சங்கத்தை சேர்ந்த ஜேம்ஸ் உள்ளிட்டோர் பேசினர்.
இதனைத்தொடர்ந்து டாம் கோ மூலம் கடனுதவி பெற்று புதிதாக ஆண்டிபட்டி பகுதியில் தொடங்கப்பட்டுள்ள 4 பேரின் தையலகம், ஜவுளிக்கடை, உணவகங்களை டாம்கோ தலைவர் பெர்ணாண்டஸ் ரத்தினராஜா பார்வையிட்டு, தொழில்முனை வோர்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து கேட்டறிந்தார்.

இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம், கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குநர் ஆரோக்யசுகுமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவ வங்கி மேலாளர் வாஞ்சிநாதன், பெரியகுளம் யூனியன் சேர்மன் தங்கவேல் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தேனி மாவட்ட டாம்கோ திட்ட ஆலோசனைக் கூட்டம்: கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: