×

முறையான பயிற்சியால் எதுவும் சாத்தியமே!

நன்றி குங்குமம் தோழி

சென்னை மெரினா கடற்கரை எதிரில் அமைந்துள்ளது அந்த கஃபே. கடற்கரையின் அழகை ரசித்துக் கொண்டே அங்கு பரிமாறப்படும் உணவுகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சுவைத்து மகிழலாம். உணவினை இவர்கள் அன்போடு சமைப்பதால் என்பதாலோ அந்த உணவுகளும் சுவையாக இருக்கிறது. காரணம், அங்கு ஒவ்வொரு உணவினையும் மிகவும் தரமாகவும், கவனமாகவும் அவர்களின் ஒட்டு மொத்த அன்புடன் சமைப்பவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சிக்குன்றியவர்கள். ஆர்டர் செய்யப்படும் உணவினை சரியாக சமைத்து அதை உரியவருக்கு பரிமாறுகிறார்கள்.

இவர்களால் அது சாத்தியமா என்று நமக்குள் எழும் கேள்விக்கு… முறையாக பயிற்சி அளித்தால் எதுவும் சாத்தியம் என்கிறார் கஃபேயின் மேலாளர் மோகன் கிருஷ்ணா. அவர் இங்கு இவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறைகள் மற்றும் கஃபேயின் செயல்பாட்டினை குறித்து விவரித்தார்.‘‘மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரகம் சார்பாக அவர்களுக்கான வாழ்க்கை முறையினை எப்படி மாற்றி அமைக்க வேண்டும் என்ற அருங்காட்சியகம் சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர்களுக்கான அன்றாட வசதிகளை எவ்வாறு அமைத்து தரவேண்டும் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகமாக அமைத்துள்ளனர்.

அதில் ஒரு பகுதிதான் இந்த கஃபே. இதனை வின்னர்ஸ் பேக்கரி மற்றும் வித்யாசாகர் பள்ளியின் நிறுவனர்கள் இருவரும் இணைந்து நடைமுறைப்படுத்தியுள்ளனர். வித்யாசாகர் பள்ளியில் மாற்றுத்திறனாளி மற்றும் மனவளர்ச்சிக்குன்றிய மாணவர்களுக்கு பேக்கிங் மற்றும் சமையல் கலை குறித்த அடிப்படை திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் முதலில் அவர்களுக்கு ஒவ்வொரு பொருட்களையும் அதன் பெயர்களை வைத்து முதலில் அடையாளம் காண கற்றுத் தருகிறார்கள். அடுத்து அவர்கள் சமைத்த மற்றும் வாழும் இடத்தினை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான பயிற்சி அளிக்கிறார்கள். பள்ளியில் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்த ‘மியூசியம் கஃபே’ மூலம் வாய்ப்பினை உருவாக்கி கொடுக்கிறோம். பள்ளியில் அடிப்படை பணிகளை கற்றுக்கொண்டு வரும் மாணவர்களுக்கு இங்கு சமையல் செய்ய கூடுதல் பயிற்சியும் வழங்குகிறோம்.

முதலில் இங்கு வரும் போது அவர்களை நேரடியாக சமைக்க அனுமதிப்பதில்லை. தரையை சுத்தம் செய்வது, பாத்திரங்களை கழுவுவது, மேஜை மற்றும் நாற்காலிகளை சரியாக அமைப்பது போன்ற பணிகளைதான் கொடுப்போம். அடுத்தகட்டமாக டீ, காஃபியினை தயாரிக்க சொல்வோம். இவ்வாறு படிப்படியாக பல்வேறு உணவு வகைகளை தயார் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படும். டீ, காஃபியில் ஆரம்பித்து பீட்சா, சமோசா, சாண்ட்விட்ச், சாட் உணவுகள், பிஸ்கெட், கேக், பிரெட் என அனைத்து உணவுகளையும் தயார் செய்கிறார்கள்.

அதற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, எந்தெந்த உணவுகளை எப்படி செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை கற்றுத் தந்துள்ளோம். ஒவ்வொரு உணவுக்கும் தேவையான பொருட்களின் அளவினை மிகச் சரியாக சேர்க்க வேண்டும் என்பதால், அளவீடுகள் குறிப்பிடப்பட்ட சமையல் உபகரணங்களைதான் அவர்கள் பயன் படுத்துகின்றனர். இவர்களுக்கு ஸ்டெப் 1, 2 என்ற விதிப்படியில் சொல்லித் தந்தால்தான் புரியும். மேலும் சிறப்புக் குழந்தைகள் என்பதால் பாதுகாப்பு கருதி கேஸ் அடுப்பிற்கு பதில் இண்டக் ஷன் அடுப்பினை பயன்படுத்துகிறோம். கேஸ் அடுப்பு பயன்படுத்த வேண்டும் என்றால், அதனை என் மேற்பார்வையில்தான் செய்வார்கள்’’ என்றவர், அங்கு அவர்களின் பணி நிலையினை குறித்து விவரித்தார்.

‘‘எல்லோருக்கும் எல்லா வேலைகளும் தெரியும் என்றாலும், இங்கு ஒவ்வொருவரும் ஒரு வேலையில் ஈடுபடுவார்கள். ஒருவர் ஆர்டர் எடுப்பார். மற்றவர்கள் உணவினை தயாரிப்பார்கள். ஆர்டர் எடுத்த மாணவர்கள் அதனை சரியான டேபிளில் சர்வ் செய்வார். இதனை சுழற்சி முறையில் கொடுப்பதால், எல்லோரும் எல்லா பணியிலும் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். மேலும் கஃபேக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் இயல்பாக கலந்துரையாட வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம். இது அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கிறது’’ என்றவர், அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறைகள் குறித்து பகிர்ந்தார்.

“இவர்கள் சிறப்புக் குழந்தைகள் என்பதால் அறிவுரைகளை மாற்றி சொல்ல முடியாது. ஒரே சீராக சொன்னால்தான் புரியும். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியில் சின்னச் சின்ன மாற்றம் செய்தாலும் அவர்களால் பணிகளை சரியாக செய்ய முடியாது. அதே சமயம் ஒரு வேலையை சொன்னால் அதை மிகவும் உற்சாகமாக செய்வார்கள். வாடிக்கையாளர்களுடன் இயல்பாக கலந்துரையாட அனுமதிக்கும் போது அவர்களுக்குள் ஒரு உற்சாகம் மற்றும் மாற்றங்களை பார்க்க முடிகிறது.

சாப்பாடு சூப்பர் என்று பாராட்டினால், ஆர்வத்துடன் பணியில் ஈடுபடுகிறார்கள். வாடிக்கையாளர்களை ‘அக்கா’, ‘அண்ணா’ என்று அன்புடன் அழைப்பதால், அந்த ஒரு வார்த்தைக்காகவே பலர் மீண்டும் மீண்டும் இவர்களுக்காகவே வருகிறார்கள். இது போன்ற சமூகத் தொடர்பு ஏற்படுத்தும் போது, அது அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தினை தருகிறது. அதன் பலன் இங்கு பயிற்சி பெற்ற 2 மாணவர்கள் தற்போது வேறு கஃபேயில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்தப் பயிற்சி மற்றும் அனுபவம் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஒரு பாதையினை வழிவகுக்கிறது.

தற்போது இந்த கஃபேயில் பெரும்பாலும் வித்யாசாகர் பள்ளி மாணவர்கள்தான் பயிற்சி பெற வருகிறார்கள். காரணம், அங்கு அவர்களின் பள்ளியில் ஏற்கனவே அடிப்படை விஷயங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதால், அவர்களால் இங்குள்ள வேலைகளை எளிதாக கையாள முடிகிறது. அந்த பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாமல், இந்தக் குறைபாடு உள்ள மற்றவர்களுக்கும் ஒரு முன்னேற்றம் வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் இங்கு பயிற்சி அளிக்கிறோம்.

பயிற்சி பெற்று வேலை செய்பவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கி வருகிறோம். சிறப்புக் குழந்தைகளுக்கான இது போன்ற கஃபே செயல்பட்டு வருகிறது என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். வாடிக்கையாளர்களின் தொடர் வருகையால் மாணவர்களின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றங்களை காண முடியும். இது அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஊக்கம். அது அவர்களுக்குள் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும்.

கஃபேயில் சாப்பிட மட்டுமில்லாமல், பிறந்தநாள், திருமண நாள், புத்தக வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளையும் நிகழ்த்த அனுமதிக்கிறோம். இவர்களால் பிறரை மட்டுமே சார்ந்து வாழமுடியும் என்ற பொதுவான சிந்தனையை இந்த மியூசியம் கஃபே மூலம் தகர்த்த விரும்பினோம்’’ என்றார் கஃபேயின் மேலாளர் மோகன் கிருஷ்ணா.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

The post முறையான பயிற்சியால் எதுவும் சாத்தியமே! appeared first on Dinakaran.

Tags :
× RELATED உங்கள் பழைய வண்டிக்கு புது லைஃப்