தொழில் தொடங்கி முன்னேற்றம் அடைய வழிவகை செய்யும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2,119 கோடி கடனுதவி

*அரசுக்கு நன்றி தெரிவித்த பெண்கள்

தேனி : தேனி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவியாக ரூ.2 ஆயிரத்து 119 கோடி கட தவி வழங்கியதற்காக அரசுக்கு மகளிர் சுயஉதவிக்குழுவினர் நன்றி பாராட்டி வருகின்றனர். தமிழ்நாடு அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கும், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி தமிழ்நாடு அரசு சுய உதவிக்குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், சுயஉதவிக்குழு இயக்கத்தை, மாநிலம் முழுவதும் பரவலாக்கி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் சுய சார்புத் தன்மை மூலம், பெண்களின் நிலையை மேம்பாடு அடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு இயக்கம் மற்றும் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோர் திட்டம் ஆகிய மூன்று முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இதனடிப்படையில் தேனி மாவட்டத்தில மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கிக்கடன் பெற்று வாழ்வாதாரத்தையும் தாண்டி குறிப்பாக, தொழில் முனைவோராக பெண்கள் உருவாகி வருகிறார்கள். மேலும், சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் இணைய வணிகம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவது கூடுதல் சிறப்பாக உள்ளது. எனவே, பெண்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கி வங்கிகள் மூலம் கட தவிகள் பெற்று தொழில் தொடங்கி முன்னேற்றம் அடைய வழிவகை செய்கிறது.

மேலும், தேனி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 33 ஆயிரத்து 615 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1 ஆயிரத்து 990 கோடியே 33 லட்சம் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டு பல்வேறு வகையான தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருளாதாரம் மேம்பாடு அடைந்து வருகின்றனர். தனிநபர் தொழில் கடனாக கடந்த 2024-25ம் ஆண்டு முதல் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டு 174 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2 கோடியே 57 லட்சம் கடன் வழங்கப்பட்டு தொழில் முனைவோராக செயல்பட்டு வருகின்றனர்.

ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் மூலம் 1190 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தொழில் கடன் வழங்கிடும் வகையில் ரூ.9 கோடியே 60 லட்சம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. 663 புதிய சுய உதவிக்குழுக்களுக்கு ஆதார நிதியாக ரூ.95 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் ஆகியோர் பயனடையும் வகையில் 98 பேருக்கு ரூ.12லட்சம் வறுமை குறைப்பு நிதியாக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாழ்வாதார திட்டத்தின் கீழ் பண்ணை சாரா தொழில் புரியும் 450 மகளிருக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் தொழில் கடன் வட்டார வணிக வள மையம் மூலமாக பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 77 உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு ரூ.1.54 கோடி பண்ணை சார்ந்த தொழிலுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. 46 நலிவுற்ற மகளிருக்கு ஆடு வளர்ப்பிற்காக ரூ.60 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. 230 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு புறக்கடை கோழி வளர்ப்பு நிதியாக ரூ.21 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் வளர் இளம் குழந்தைகள் ரத்த சோகையின்றி ஊட்டச்சத்துடன் வாழ 4 ஆயிரத்து 100 மகளிர் சுயஉதவிக்குழு இல்லங்களில் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்திட ரூ.2 லட்சம் மதிப்புள்ள காய்கறி செடி மற்றும் கீரை விதை தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் விவசாய பணிகள் விரைவாக நடந்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வேளாண்மை கருவிகளை கையாளும் வகையில் 12 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மூலம் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை கருவி வாடகை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 10 முருங்கை தொகுப்புகள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கால் நடைகளின் பால் உற்பத்தி மற்றும் புரத சத்தினை அதிகரித்திடும் வகையில் பசுந்தீவினமாக அசோலா அமைத்திட 115 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.5.75 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற பகுதியில் ஏழை மகளிரைக் கொண்டு 1585 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்படடு ரூ.7லட்சத்து 16 ஆயிரம் குழு உருவாக்க தொகை சமுதாய வளப்பயிற்றுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1396 குழுக்களுக்கு ரூ.1 கோடியே 11 லட்சம் சுழல்நிதி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. 61 பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள் கடன் வழங்கிடும் வகையில் ரூ.8 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட 1585 குழுக்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ஊக்குநர் மற்றும் பிரதிநிதி மற்றும் உறுப்பினர் பயிற்சிக்கு ரூ.29 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நகர்புறத்தில் 583 மகளிருக்கு தனிநபர் கடன் மூலம் தொழில் புரிய ரூ.5 கோடியே 8 லட்சம் வங்கிக்கடனான வழங்கப்பட்டுள்ளது. 277 குழுக்களுக்கு தொழில் கடனாக ரூ.10 கோடியே 39 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறாக தேனி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு தமிழக அரசு ஏற்பாட்டின் பேரில் ரூ.2,119 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதால் மகளிர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எங்களது வாழ்வாதாரத்திற்கான உதவி

கம்பம் அருகே கே.கே.பட்டியை சேர்ந்த கவுரி கூறியதாவது, ‘‘எங்களது சங்கிலிகருப்பன் பெயரில் தனிநபர் கல்லுடைக்கும் மகளிர் சுயஉதவிக்குழு நடத்தி வருகிறோம். எங்களது வாழ்வாதாரத்திற்கு மகளிர் குழு மூலமாக ரூ.7 லட்சம் கடனுதவியை மாவட்ட கலெக்டர் மூலமாக தமிழ்நாடு அரசு வழங்கியது. இதன்மூலம் சிறுதொழில் செய்து எங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றக் கொள்ள பேருதவியாக உள்ளது.

இந்த வங்கிக்கடனுதவியை வழங்கிய முதலமைச்சருக்கு மனமார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’என்றார். மேலும், அவகோடா மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த சரண்யா கூறும்போது, ‘‘நான் மகளிர் சுயஉதவிக்குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறேன். எங்கள் குழு உறுப்பினர்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.28 ஆயிரத்தை கொடுத்துள்ளது. இந்த கட தவி மூலம் எங்கள் குழுவின் முன்றேத்திற்கும், எங்களின் வாழ்வாதாரத்திற்கும் மிகுந்த உதவியாக இருக்கும். இதுபோன்று பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’என்றார்.

The post தொழில் தொடங்கி முன்னேற்றம் அடைய வழிவகை செய்யும் வகையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.2,119 கோடி கடனுதவி appeared first on Dinakaran.

Related Stories: