குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்: கலெக்டரிடம் மக்கள் மனு

கரூர், செப். 24: குளித்தலையில் கடம்பனேஸ்வரர் கோயில் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த முகாமில், கரூர் மாவட்டம் குளித்தலை 5வது வார்டு பொதுமக்கள் வழங்கிய மனு விவரம்: காவிரியின் தென்கரையில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும் தைப்பூசம், பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்று.

எட்டு ஊர்களை சேர்ந்த சிவன், அம்பாள் சுவாமிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு காவிரி கரையில் தீர்த்தவாரி நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வர். சமீபத்தில் நடைபெற்ற திருமுடக்கு விழாவில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பக்தர்களும் கலந்து கொண்டனர். மேலும், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவம், தைப்பூசம், ஆடி பூரம், வைகாசி விசாகம் போன்ற விழாக்களில் சுவாமி மற்றும் அம்மன் உற்சவம் நடக்கும். இந்த கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் தேர் ஓடுவதற்கும், பல்லக்கில் சாமி உற்சவம் நடப்பதற்கும் இடையூறாக சிலர் ஆக்ரமித்துள்ளனர். இதனால், தேரோடும் வீதிகளில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. இதுகுறித்து, கோயில் நிர்வாகம் பலமுறை கூறியும் ஆக்ரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன.

இதனால், தேர் ஓடுவதற்கும், பக்தர்கள் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. எனவே, இது குறித்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அன்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயில் மாட வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்: கலெக்டரிடம் மக்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: