குழப்பம் ஏற்படுத்தும் கருத்தை பேசிய நிர்வாகி மீது திருமாவளவன் நடவடிக்கை எடுப்பார்: ஆ.ராசா எம்பி பேட்டி


சத்தியமங்கலம்: குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய விசிக நிர்வாகி மீது திருமாவளவன் நடவடிக்கை எடுப்பார் என்று ஆ.ராசா எம்பி கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் துணை முதல்வர் ஆக கூடாதா என்பது போல கேட்டு சர்ச்சைக்குரிய வகையில் அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்திருந்தார். இதற்கிடையே, திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா நேற்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைக்கு மத வாதத்தை ஒழிப்பதில், சமூக நீதியை காப்பதில், திமுகவோடு தோள் கொடுக்கும் கட்சிகளில் ஒரு நல்ல இடத்தில் இருக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பதையும், இடதுசாரி சிந்தனைகளில் இருந்து நழுவாமல் இருக்கும் தலைவர் திருமாவளவன் என்பதிலும் எனக்கோ, எங்களது தலைவருக்கோ எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

இந்த சூழலில் இப்படிப்பட்ட ஒரு கருத்தை அந்த கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள ஒருவர் கொள்கை புரிதல் இன்றி பேசி இருப்பது கூட்டணி அரணுக்கு, அரசியல் அறத்திற்கு ஏற்புடையது அல்ல. திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்க மாட்டார்‌. இந்த கருத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார். இப்படிப்பட்ட கருத்துக்களை கூறியவரை அவர் அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதை ஒரு நாளும் ஏற்க மாட்டார். ஏற்கக் கூடாது என வேண்டுகோள் வைக்கிறேன். திருமாவளவன் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார் என்பது எனது நம்பிக்கை. விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட எல்லோரும் அரசியல் சட்டத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post குழப்பம் ஏற்படுத்தும் கருத்தை பேசிய நிர்வாகி மீது திருமாவளவன் நடவடிக்கை எடுப்பார்: ஆ.ராசா எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: