காலாவதியாகி விஷமான குழந்தைகளை கவரும் நொறுக்கு தீனி பாக்கெட்டுகள் * பாலாற்றில் கொட்டியதால் அதிர்ச்சி * அதிகாரிகள் குழி தோண்டி புதைத்தனர் பள்ளி சிறுவர்கள் எடுத்து சாப்பிட்டால் ஆபத்தாகும்

வேலூர், செப்.24: பள்ளி சிறுவர்கள் எடுத்து சாப்பிட்டால் ஆபத்தாகும் வகையில், காலாவதியாகி விஷமான குழந்தைகளை கவரும் நொறுக்கு தீனி பாக்கெட்டுகள் வேலூர் பாலாற்றில் கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை குழி தோண்டி புதைத்தனர். ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் பாலாறு நுழையும் வாணியம்பாடி தொடங்கி அது கடலில் சங்கமமாகும் செங்கல்பட்டு அடுத்த சதுரங்கப்பட்டினம் வரை மொத்தம் 122 கி.மீ தூரம் பாலாறு தமிழகத்தில் பயணிக்கிறது. இப்பாலாற்றின் இருகரைகளிலும் குறிப்பாக வாணியம்பாடி, ஆம்பூர், மேல்விஷாரம், ராணிப்பேட்டை சிப்காட், வாலாஜா, கல்பாக்கம் சுற்றுப்புறங்களில் நிறைந்துள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்களை வைத்திருந்தாலும், கழிவுநீரை சுத்திகரிக்காமல், மழைக்காலங்களில் வரும் சிறிதளவு வெள்ளத்தை பயன்படுத்தி தங்கள் கழிவுகளை பாலாற்றில் கலக்க செய்கின்றன.

ஆரம்பத்தில் இந்த தொழிற்சாலைகளின் கழிவுகள் மட்டுமே கலந்து வந்த நிலையில், பின்னர் பாலாற்றின் இருகரைகளிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீரும், மக்கும், மக்கா குப்பைகளும் கூட பாலாற்றை வந்தடைந்தன. இதுபோதாதென்று கட்டுமான நிறுவனங்களின் கட்டுமான கழிவுகளும், தனியாரின் கட்டுமான கழிவுகளும் கூட பாலாற்றில் கொட்டப்பட்டு வந்தன. இதற்கு நடுவில் பாலாற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையும் பாலாற்றை பாழ்படுத்துவதில் குறிப்பிட்ட பங்கை எடுத்துக் கொண்டது. இந்த நிலையில்தான் சமீப காலமாக காலாவதியாகும் உணவு பண்டங்கள் அடைக்கப்பட்ட பாக்கெட்டுகளும், காலாவதியாகும் மருத்துவக்கழிவுகளும் கூட பாலாற்றில் திருட்டுத்தனமாக கொட்டி செல்வது தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் சத்துவாச்சாரியில் இருந்து காங்கேயநெல்லூர் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் பாலாற்றில் உணவு பொருட்கள் கொட்டப்பட்டிருந்தது. காலாவதியாகி விஷமான குழந்தைகளை கவரும் நொறுக்கு தீனிகளான விதவிதமான சிப்ஸ் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் விடுமுறை என்பதால் சிறுவர்கள் யாரும் எடுத்து சாப்பிடும் அபாயம் ஏற்படவில்லை. இல்லாவிட்டால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால் நாய்கள் உட்பட பாலாற்றில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் இவற்றை சாப்பிட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று காலை அவ்வழியாக சென்ற சிலர் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலின்பேரில் உடனடியாக மாநகர நல அலுவலர் கணேஷ், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார், உதவி ஆணையர் வெங்கடேசன், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ், 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் ஆகியோர் முன்னிலையில் பாலாற்றில் கொட்டப்பட்ட காலாவதியான சிப்ஸ் பாக்கெட்டுகளை பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டன. தொடர்ந்து காலாவதியான உணவு பொருட்களை கொண்டு வந்து கொட்டியவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதகிாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post காலாவதியாகி விஷமான குழந்தைகளை கவரும் நொறுக்கு தீனி பாக்கெட்டுகள் * பாலாற்றில் கொட்டியதால் அதிர்ச்சி * அதிகாரிகள் குழி தோண்டி புதைத்தனர் பள்ளி சிறுவர்கள் எடுத்து சாப்பிட்டால் ஆபத்தாகும் appeared first on Dinakaran.

Related Stories: