வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன்

பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதியில் போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில் பைக் திருடன் சிக்கினான். சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் நேற்று காலை புளியந்தோப்பு பட்டாளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பைக் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து வாகனத்தின் இன்ஜின் நம்பர் மற்றும் சேஸ் நம்பர் ஆகியவற்றை சோதனை செய்தபோது வாகன பதிவெண் போலியானது என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர் ஓட்டி வந்தது, செம்பியம் பகுதியில் திருடப்பட்ட பைக் என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் பிடிபட்ட நபரை செம்பியம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், பிடிபட்டவர் அயனாவரம் ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த இம்ரான் உசேன் (31) என்பதும், இவர் கடந்த மாதம் 22ம் தேதி பெரம்பூர் நெல்வயல் ரோடு பகுதியில் ஜோதி சதன்யா (26) என்பவரது வாகனத்தை திருடிச் சென்றதும், இதில் ஜோதி சதன்யா செம்பியம் குற்ற பிரிவில் புகார் அளித்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இம்ரான் உசேன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் appeared first on Dinakaran.

Related Stories: