கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலை உருவாக்கினால் வெள்ள பாதிப்பை குறைக்கலாம்: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கருத்து


சென்னை: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலை உருவாக்குவதன் மூலம் வெள்ளப்பாதிப்பை குறைக்கலாம். எனவே இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தி உள்ளது. வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடரப்பட்ட மனுவை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் (upstream) பகுதிகளில் புதிய நீர்நிலைகளை உருவாக்க முடியுமா அல்லது ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்த முடியுமா என அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது வேளச்சேரி ஏரிக்கு மேற்புறம் ஆதம்பாக்கம் ஏரி மட்டும் இருப்பதாகக் நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட தீர்ப்பாயம், கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை நீர் நிலையாக மாற்றுவது குறித்து அரசின் நிலைப்பாட்டை அறிந்து தெரியப்படுத்துமாறு அரசு தரப்பு வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். மேலும் பசுமைப் பூங்காவாக மாற்ற அரசு முடிவெடுத்துள்ள நிலையில் நீர்நிலையுடன் கூடிய பூங்காவாக உருவாக்கினால் பெருமழை காலங்களில் அதிக நீரை சேமிக்க முடியும். வெள்ளம் ஏற்படுவதையும் தடுக்க முடியும் என தெரிவித்து, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.

The post கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலை உருவாக்கினால் வெள்ள பாதிப்பை குறைக்கலாம்: தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: