பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இளநீர் கொள்முதல் விலை ரூ.40ஆக உயர்வு: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள தோட்டங்களில் இளநீர் கொள்முதல் விலை ரூ.40 ஆக உயர்ந்து உள்ளது. இதனால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தென்னைகளிலிருந்து அறுவடை செய்யப்படும் செவ்விளநீர் மற்றும் பச்சை நிற இளநீர் உள்ளிட்டவை, உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு விற்பனைக்காக அதிகளவு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், இளநீரின் விலை உயர்ந்து, பொள்ளாச்சியிலிருந்து வெளியூர்களுக்கு அதிகளவு இளநீர் அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போது தோட்டங்களில் கொள்முதல் விலையாக ஒரு இளநீர் ரூ.42 இருந்தது. பின்னர் பெய்த கோடை மழை, தென்மேற்கு பருவமழை காரணமாக இளநீர் உற்பத்தி பாதித்து, விலையும் ரூ.35 ஆக சரிந்தது. இந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிரித்துள்ளது. இதனால், பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள தோட்டங்களில் இளநீர் அறுவடை துவங்கியுள்ளது. இதுகுறித்து ஆனைமலை வட்டார இளநீர் உற்பத்தியாளர் சங்க தலைவர் சீனிவாசன் கூறியதாவது: பொள்ளாச்சி பகுதியில் உள்ள தோட்டங்களில் இளநீர் விளைச்சல் குறைவாக இருப்பதால், நேற்றைய நிலவரப்படி பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.40ஆக அதிகரித்துள்ளது. இதனால், தென்னை விவசாயிகள் மகிழ்ந்து அடைந்துள்ளனர். இந்த நிலை வடகிழக்கு பருவமழை வரை இருக்க வாய்ப்புள்ளது என்றார்.

The post பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இளநீர் கொள்முதல் விலை ரூ.40ஆக உயர்வு: தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: